பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்229

      (இப்பகுதியோடு ஆசிரியர் பரிமேலழகர், 'சுவையொளி யூறோசை
நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு' (27) என்னும்
திருக்குறட்கு வரைந்த விளக்கவுரை ஒப்புக் காண்டற்பாலது.)

      அது வருமாறு: "அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய
அவைதாமைந்தும், அவற்றின்கட் டோன்றிய அப் பூதங்களைந்தும்,
அவற்றின் கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கன்மேந்திரியங்களைந்துமாக இருபதுமாம். வகைதெரிவான் கட்டென
உடம்பொடு புணர்த்ததனால் தெரிகின்ற புருடனும் அவன்
தெரிதற்கருவியாகிய மான் அகங்கார மனங்களும் அவற்றிற்கு முதலாகிய
மூலப்பகுதியும் பெற்றாம். . . . இவ் விருபத்தைந்துமல்லது உலகெனப்
பிறிதொன்றில்லை" எனவரும்.)

      (பரிமே.) 17-22. இவற்றுள் முன்னர்க் கூறப்பட்ட புலன்களுள்,
ஒன்று - ஓசை: இரண்டு - ஓசையும் ஊறும்; மூன்று - ஓசையும் ஊறும்
ஒளியும்; நான்கு - ஓசையும் ஊறும் ஒளியும் சுவையும்; ஐந்து - ஓசையும்
ஊறும் ஒளியும் சுவையும் நாற்றமும்.

      இவ்வ குணங்களால் உணரப்படுவனவாகிய பூதங்களும் நீ.

      24. மூலப்பகுதியாவது, சாத்துவிகம் இராசதம் தாமதமென்னும்
குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையாதலால் அது கூறவே
அறிவறியாமைகள் இன்பதுன்பங்கள் என்னும் உயிர்க்குணங்களும்
அடங்கின.

      அறமாகிய சிறப்புடைக்குணம் கூறவே சிறப்பில் குணமாகிய
பாவமும் அடங்கிற்று.

      இதனால் ஈண்டு எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிரென்பது
உணர்த்தப்பட்டது.

26-29: தன்னுரு . . . . . . அறிதுயிலோனும்

      (இ-ள்.) தன் உரு உறழும் பால் கடல் நாப்பண் - தன்
நீலத்திருமேனியோடு மாறுபட்ட வெண்மை நிறத்தினையுடைய
திருப்பாற்கடல் நடுவே, மின் அவிர் சுடர் மணி கவை நா விரித்த
ஆயிரம் அருந்தலை காண்பு இன் சேக்கை - மின்னல் போன்று
விளங்காநின்ற ஒளியினையுடைய மணிகளோடே பிளவுபட்ட நாவினையும்
படம்விரிக்கப்பட்ட ஆயிரம் அரிய தலைகளையுமுடைய காண்பதற்கு
இனிதாகிய அரவப்பாயலிலே துயிலாநின்ற, துவளம் சூடிய -
துழாய்மாலையை அணிந்த, அறிதுயிலோனும் - யோக நித்திரையை
உடையவனும்;

      (வி-ம்.) திருமாலின் நீலநிறத்தோடு மாறுபடும் வெண்ணிறமுடைய
பாற்கடல் என்பார், 'தன்னுரு உறழும் பாற்கடல்' என்றார். உரு - நிறம்.
உறழும் - மாறுபடும் நாப்பண் - நடு. கவைநா - பிளவுபட்ட நாக்கு;
பாம்பின் நா பிளவுபட்டிருத்தல் இயல்பு. பிறவுயிர்களிடத்துக்
காண்டற்கரிய தலை என்க. ஆதிசேடனுக்கு ஆயிரந்தலை உள என்பது
புராணம். காண்ப - காண்டல்: காட்சிக்கினிய என்க. சேக்கை - படுக்கை.
துளவம் - துளசி. அறிதுயில் - யோகநித்திரை.