பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்231

வுலகம் நீரினுட் கிடந்தமையால் அதனை அதனினின்றும்
ஆதிவராகமாகி யிறைவன் மேலே எடுத்துக் காத்தருளினார்
என்பது கதை.

      நானிலம்: ஆகுபெயர். அதன்கண் வாழும் உயிர்கள் துளக்கற
என்க. துளக்கு - நடுக்கம்; ஈண்டுத் துன்பம் என்னும் பொருள் குறித்து
நின்றது. முழுமுதல் - மருப்பினது பரிய அடிப் பகுதி என்க. மருப்பின்
அடிப்பகுதிவரை கவிக்கப்பட்ட பேரணி என்க. பொன்னாற் செய்த அணி
பூவேலை பொருந்திய பேரணி. நாற்றிய பேரணி மணி மடல் பேரணி
எனத் தனித்தனி கூட்டுக. களிறு - ஆண்பன்றி: என்றது, ஆதிவராகப்
பெருமானை.

      தன்னுரு என்பது தொடங்கி, ஒருவனை என்னுந் துணையும்
கூறியதிருவுருவங்களுள் அறிதுயிலோன் என்றது பாற்கடற் பரமனையும்,
நாஞ்சிலோன் என்றது பலதேவனையும், களிறு - என்றது ஆதிவராக
மூர்த்தியையும், ஒருவன் என்றது பரமபதப் பரமனையும் என்க. இப்
பகுதியால் வேறு வேறு பெயரின் மேவிய தெய்வமனைத்தும் நீயே
என்றபடியாம்.

      (பரிமே.) அவ்வுயிர்களின் பொருட்டு அறிதுயிலோனும்,
நாஞ்சிலோனும், களிறும் ஆயதுவேயன்றி முக்குணங்களது
வேறுபாட்டான்மும்மூர்த்திகளுமாகிய தலைபிரிந்த ஒருவனை
என்க.

      36-7. ஆகி என்னும் வினையெச்சம் ஆகிய என்னும்
பெயரெச்சத்து ஆதலொடு (என்னும் வினையோடு) முடிந்தது.

38 - 45: படர்சிறை . . . . . . . மொழி

      (இ-ள்.) பல் நிறம் படர்சிறை பரப்புப் பகையை - பெருமானே நீ
பலவாகிய நிறமமைந்த விரிந்த சிறகினையுடையதும் பாம்பினது
பகையுமாகிய கருடப்பறவையினை, கொடி எனக் கொண்ட கோடாச்
செல்வன் - கொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத
திருவருட் செல்வன் ஆவாய், சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ-
கருடச்சேவல் எழுதப்பட்ட மிகவுயர்ந்த கொடியியையுடைய செல்வனே,
நீ ஏவல் இன் முது மொழி கூறும் நல்புகழை - ஓதுதற்கு இனிய
வேதத்தாற் கூறப்படுகின்ற நல்ல புகழினை உடையை, கார் பூவைமலர்
கடல் இருள் மணி அவை ஐந்தும் உறழும் அணிகிளர் மேனியை -
எம்பெருமானே நீ முகில் காயாமலர் கடல் இருள் நீலமணி என்னும்
இவ்வைந்தின் நிறத்தையும் ஒத்த அழகு ததும்புகின்ற திருமேனியினை
உடையை, அருள்வயின் மொழி - நினது அருளுடைமை
நிலைக்களனாகத் தோன்றுகின்ற மொழிகளும், செறல் வயின் மொழி -
நினது தெறுதற்பண்பு நிலைக்களமாகத் தோன்றுகின்ற மொழிகளும்
நிரலே, வலம்புரி வாய்மொழி அதிர்புவான் முழக்கு செல் அவை
நான்கும் உறழும் - வலம்புரிச்சங்கின் முழக்கமும் வேத முழக்கமும்
அதிர்ந்து முகில் முழங்கும் முழக்கமும் இடியேற்றின் முழக்கமும் ஆகிய
இந் நான்கு முழக்கத்தையும் ஒக்கும்;