பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்233

      (வி-ம்.) முடிந்தது: இறந்தகாலம். முடிவது: எதிர்காலம். முகிழ்ப்பது:
நிகழ்காலம். ஆகிய அம்மூன்று காலக் கூறுபாட்டையும் கடந்து மேலும்
அவைமூன்றும் தம்கீழ் அமைந்துள்ள அடி என்க.       காலம் என்னும்
அருவப்பொருள் இறைவன் போன்று அநாதியாக உள்ளது. அக்காலத்தை
நிலைக்களனாகக் கொண்டு இறைவன் படைப்புத் தொழில் முதலிய
முத்தொழிலையும் நிகழ்த்துவன்; அங்ஙனம் தொழில் பற்றித் தோன்றிய
பொருள்களையே அளவையாக வைத்துக் காலத்தை உலகியனடத்தற்
பொருட்டுக் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது அது தானே கூறுபடாது;
இக் கூறுபட்ட முக்காலமும் படைத்தற் றொழிலோடு தொடங்கி அழித்தற் றொழிலோடு முடிவனவாகும். படைத்தற்கு முன்னும் அழித்தற்குப்
பின்னுமுள்ள இறைவன் அவற்றை முன்னும் பின்னும் கடந்தவனாகின்றான்;
ஆதலின், முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதுமாகிய அவை மூன்றையும் கடந்து என்றும் கூறுபடாத அருவமாகிய காலந்தானும் இறைவன்
படைப்பிற்குத் துணைக் காரணமாய் அவனது ஆட்சிக்கண்
அடங்கிநிற்றலால், "அவை அமைந்த கழலி னிழலவை" என்றும் கூறினார்.
இதனை,
காலமே கடவு ளாகக் கண்டனம் தொழிலுக் கென்னில்
காலமோ அறிவின் றாகும் ஆயினும் காரி யங்கள்
காலமே தரவே வேண்டும் காரணன் விதியி னுக்குக்
காலமும் கடவு ளேவ லாற்றுணைக் கார ணங்காண்" (சிவ - சித்தி. சுப.10)

      எனவரும் அருமைச் செய்யுளானும் உணர்க.

      நிழலவை - நிழலினையுடையை: முன்னிலை ஒருமை வினைமுற்று.
ஏத்துமவை: ஏத்துபவை எனப் பலவறி சொல்லாகக் கோடல் நன்று. இதற்கு
ஏத்தாநின்ற உயிர்கள் எனப் பொருள்கொள்க. ஏத்துமவை இருவினையும்
இல என முடியும். இனி ஆசிரியர் பரிமேலழகர் இதனைப் பலர்பாற்
படர்க்கை வினையாலணையும் பெயராகக் கொண்டு 'ஏத்துமன்பர்' எனப்
பொருள் கூறியுள்ளமை ஆராய்தற்குரியதாம்.

      இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் என மூன்று வகைப்பட்ட
தொழில் செய்வானாயினும் அவை மூன்றும் ஊன்றி நோக்குவார்க்கு
உயிர்களைப் பாதுகாத்தல் பொருட்டே ஆதல் தெற்றெனத் தோன்றும்.
இறைவன் பற்பல செய்யினும் அவையெல்லாம் ஒரே நோக்குடையன
என்பார். 'ஒருமை வினை மேவு முள்ளத்தினை' என்றார். ஒருமைவினை -
காத்தற்றொழில். இதனை,
"அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்தி தானும்
பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம்"
(சிவ-சித்தி - சுப. 37)
எனவரும் பெரியார் மொழியானும் உணர்க.

      அடை - இலை. ஈண்டுத் தாமரையிலை. அவன் திருமேனிக்கு
உவமையாதல் குறிப்பான் உணர்த்தினமையும் உணர்க. இலைப்பரப்பி