பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்236

பதினான்காம் பாடல்
----------

செவ்வேள்


பொருட் சுருக்கம்:

      18. சூரபன்மாவினைக் கிளையோடறுத்த வேற்படையுடைய
முருகவேளே!

      1-9: முகில் மிக்க மழையைப் பெய்தமையாலே சுனைப் பூக்கள்
மலர்ந்தன; கடப்பமலர்த் தாதூதும் வண்டுகளின் குரல்
பண்போன்றிருந்தன; மூங்கில்கள் அடியுறை மகளிர் தோளை ஒத்தன;
மயில்கள் அகவும் குரல் தலைவியரைப் பிரிந்து சென்ற தலைவர்களைக்
காலந்தாழாமே வம்மின் என அழைப்பவர் சொற் போன்றன.


      10-17: கொன்றைப் பூங்கொத்துக்கள் பொன்மாலை போன்றன;
பாறைகளில் வேங்கைமலர்கள் பரந்து கிடந்தன; காந்தள்கள் மலர்ந்தன;
அவற்றிடையே செங்காந்தள் மலர்கள் பரந்தன; இவ்வாறு நினது
திருப்பரங்குன்றம் கார்காலத் தன்மை மிக்கது.

      18-28: அகின் முதலியவற்றாற் புகைக்கப்படும் நறுமணப் புகையை
விரும்புவோனே! ஆறுதிருமுகத்தோடும் பன்னிரு கைகளோடும் தோன்றி
வள்ளியை மணந்தோனே! தலைவர் வந்து மீண்டும் பிரியாதிருக்கும்
பொருட்டு மகளிர் நின்னைப் பாடும் பாட்டை விரும்புவோனே!
தோன்றிய இளம் பருவத்திலேயே இந்திரன் முதலியோர் அஞ்சிய
சிறப்புடையோனே! அந்தணரது அறத்தை விரும்புவோனே!

      29-32: நீ அத் தன்மையுடையை யாகலின் யாங்கள் நின்னைப்
பெரிதும் விரும்பி அடுத்தடுத்து வழிபாடு செய்கின்றோம்! அங்ஙனம்
வழிபடுதலின் பயனாக மேலும் மேலும் அவ்வழிபாடுகளே மிகுவனவாக.

கார்மலி கதழ்பெய றலைஇ யேற்ற
நீர்மலி நிறைசுனை பூமலர்ந் தனவே
தண்ணறுங் கடம்பின் கமழ்தா தூதும்