பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்238

உரை


1-9: கார்மலி . . . . . . . . . சொற்போன்றனவே

      (இ-ள்.) கார் மலி கதழ் பெயல் தலைஇ - மேகம் மிக்க விரைந்த
மழையைப் பெய்தலானே, ஏற்ற நீர்மலி நிறை சுனை பூ மலர்ந்தன -
அந் நீரை ஏற்றமையானே நீர் மிக்கு நிறைந்த சுனைகள் மலர்களை
மலராநின்றன, தண் நறு கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு
இமிர் குரல் - குளிர்ந்த நறிய கடம்பினது மணங்கமழாநின்ற மலரில்
தாதினை ஊதாநின்ற நிறமிக்க வண்டுகள் முரலும் இசை, பண்போன்றன
- பண்களை ஒத்தன, நெடுவரை அடுக்கத்து வேய் - பெருமானே நினது
நெடிய திருப்பரங்குன்றத்துச் சாரலிலே தழைத்த மூங்கில்கள், ஆடும்
அடியுறை மகளிர் தோள்போன்றன - நினது திருமுன்னர்க் கூத்தாடும்
அடியுறை மகளிருடைய தோளை ஒத்தன, வாகை ஒண் பூ புரையும்
முச்சிய தோகைஆர் குரல் - வாகையினது ஒள்ளிய மலரை ஒக்கும்
சூட்டினை யுடையனவாகிய மயில்களின் நிறைந்த அகவற் குரல், மணந்து
தணந்தோரை நீடன்மின்வாரும் என்பவர் சொல்போன்றன -
தலைவியரைப் புணர்ந்து பின்னர்ப் பிரிந்துசென்ற தலைவரைக் காலம்
நீட்டியாதே வம்மின் என அழைப்பவருடைய சொல்லை ஒத்தன;

      (வி-ம்.) கார்: ஆகுபெயர்: மேகம். கதழ்தல் - விரைதல். பெயல்
- மழை. 'தலைஇ என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
ஏற்ற என்னும் பெயரெச்சம் சுனை என்னும் பெயர் கொண்டது. சுனை
மலர்ந்தன என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல்
நின்றது.

      பண்ணை என்பதன்கண் ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி. ஆடும்
அடியுறை மகளிர் எனவும், வேய் தோள் போன்றன எனவும் மாறுக.
அடியுறை மகளிர் - இறைவன் கோயிலில் உறைந்து கூத்தாடும் மகளிர்.
நெடுவரை என்றது திருப்பரங்குன்றத்தை என்க. வாகைப்பூ மயிலுச்சிக்
கொண்டைக்குவமை. தோகை: ஆகுபெயர்; மயில். ஆர் குரல் - நிறைந்த
குரல். தலைவியரை மணந்து பின்னர்ப் பிரிந்த தலைவரை என்க.
நீடன்மின் - காலநீட்டியாதே கொண்மின். வாரும் என்பது மரபு
வழுவமைதியாகக் கொள்க. என்னை ? செய்யும் என்னும் முற்று
முன்னிலைக்கண் வருதல் மரபன்மையான் வம்மின் என்னும் பொருட்டு.
இச் சொல் இக்காலத்து முன்னிலைப்பன்மையில் வருதலுணர்க. சொல் -
அழைக்கும் சொல். "ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்னாணை, கூடுமின்
என்று குயில் சாற்ற" (சிலப்-8: இறுதிவெண்பா) என்றார் பிறரும்.

      (பரிமே.) 7-8. சூட்டினவாகிய மயில்களின் குறைவற்ற குரல்.

      8. கூடிப்பிரிந்தோரை.