பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்248

பற்றி நிறைபயன் ஒருங்குடன் நின்று பெறநிகழும் குன்றவை சிலவே -
இந் நிலவுலகத்துள்ள மக்களுடைய பசிவெப்பத்தை ஆற்றி மேலும் பொன்
மணி மரம் முதலிய நிறைந்த பயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும்
மக்கள் பெறும்படி பயன்படா நின்ற மலைகள் சிலவே யாகும்;

      (வி-ம்.) புலவரை - அறிவெல்லை. மலைகள் நிலம் சலிப்பின்றி
நிலைபெறும்படி செய்கின்றன என்பர் ஆதலின், 'நிலவரைத் தாங்கிய
நிலைமையிற் பெயரா நேமிமுதல் நெடுங்குன்றம்' என்றார்.
இக்காரணத்தானே மலைகள் 'பூதரம்' எனவும் கூறப்படும். பூதரம் -
பூமியைத் தரிப்பது.

      நேமி - சக்கரவாளமலை. இது மலைகளுள் சிறந்தது என்பது பற்றி
முற்கூறப்பட்டது. ஆய்பு - ஆராய்ந்து. புனைதல் - புகழ்ந்து
கொண்டாடுதல். ஆற்றி என்ற வினைக்கேற்பப் பசிவெம்மை என்று
பொருள் கூறப்பட்டது. நிறை பயன் என்றது - மலையிற்றோன்றும்
பொருள்களை. அவை, பொன் மணி அகில் முதலியன.

      (பரிமே.) 5. சிறப்புவகையாற் கூறாது பொதுவகையாற் பல
வென்றுரைக்கின்: ஆங்கு - அசை.

7 - 14: சிலவினும் . . . . . . . . . . குன்றம்

      (இ-ள்.) சிலவினும் - அச் சில மலைகளுள்ளும், தெய்வம்
பெட்புறும் - தெய்வங்கள் தாமே விரும்பும், மலர் அகல் மார்பின்மைபடி
குடுமிய குலவரை சிலவே சிறந்தன - மலரையுடைய அகன்ற
தடங்களுடனே மேகங்கள் படியும் சிகரங்களையுடைய குல மலைகள்
சிலவே சிறப்புடையனவாகும், குலவரை சிலவினும் - அக்குலவரை
சிலவற்றினுள்ளும், கல்லறை கடலும் கானலும் போலவும் - கல்லென
முழங்கும் கடலும் அக் கடற்கரைப்பரப்பும் தம்முள் நிறம்
வேறுபாட்டாற்போல, வேறு வேறு உருவின் - தம்முள் வேறு வேறாகிய
கருமையும் வெண்மையுமாகிய நிறத்தினையும், புல்லிய சொல்லும்
பொருளும் போலவும் - பிரிவில்லாத சொல்லும் பொருளும் போலத்
தம்முள் வேறுபடாத தொழிலினையும் உடைய, எல்லாம் இருவர்த்
தாங்கும் - எல்லாப் பொருளும் தாமேயாகிய மாயோனும் பலதேவனும்
ஆகிய இருவரையும் தாங்காநின்ற, நீள நிலை ஓங்கு இருங்குன்றம்
சிறந்தது - நீண்ட நிலைமையினையுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம்
சிறந்ததாகும்;

      (வி-ம்.) பெட்பு - விருப்பம். குலவரை என்றது சிறப்புடைய மலை
என்றவாறு. கல்: ஒலிக்குறிப்பு. அறைகடல்: வினைத்தொகை. கானல்
என்றது மணற்பரப்பினையுடைய கடற்கரையினை. கடல் மாயோனுக்கும்
கானல் பலதேவனுக்கும் நிறம்பற்றி வந்த உவமைகள். "மாயவனும்
தம்முனும் போலே மறிகடலும், கானலும்சேர் வெண்மணலுங் காணாயோ"
(திணைமா -58.) எனவும், "மணிகிளர்