பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்25

என்றவாறு. எவ்வயினோயும் - யாண்டும் இருப்பவனும். உவணம் -
கருடப்பறவை. ஆசான் - வேள்வி முதல்வன். வேள்வி முதல்வன்
இத்தகையனாதல் வேண்டும் என வேதத்தாற் கூறப்பட்ட ஆசான் என்க.
ஆசான் உரை - மறைமொழி (மந்திரம்). படிநிலை - படிப்படியாக
ஒன்றற்கொன்று உயர்ந்த வேள்வியுள் என்க. ஆடு - யாகப்பசு.
வேள்விக்களத்தே நடப்படும் வேள்வித் தூணத்தை இறைவனாகக்
கருதப்படுதலின் அதன்கட் பிணிக்கப்படும் யாகப்பசு அவ்விறைவன்
உண்டியாகக் கூறப்பட்டது. புகழியைந்து என்புழிச் செயவெனெச்சத்தைச்
செய்தெனெச்சமாகத் திரித்துக் கொள்க. இசைமறை: வினைத்தொகை.
உறுகனல் - மிக்க நெருப்பு. மறைமுறை மூட்டி என மாறுக. சுடர்
வளப்பாடு - தீயினது பெருக்கம். ஆசான் உரை நினது உருவம்,
ஆடுகொளல் உண்டி, வேள்விக்கண் மறைமுறைப்படி சுடரைப்
பெருக்குங்கால் ஆண்டுத் தோன்றும் அச்சுடர் நின் வெளிப்பாடு என
நிரல் நிரலாகப் பொருள் கூறுக. நின்னுருபு உடன் உண்டி என்புழி உடன்
என்பது ஒடு உருபின் பொருட்டாய் வந்தது. அதனை ஏனை
இரண்டிடத்தும் கூட்டுக.

      பிறர் - கடவுளில்லை என்பார். பிறரும் எனற்பால உம்மை
செய்யுள் விகாரத்தாற் றொக்கது. நின்னொடு புரைய - நினது
பெருமைக்குப் பொருந்துமாறு என்க. வரவு - வெளிப்பாடு.

      (பரிமே.) 62: படிகால் முறையான் ஒன்றற்கொன்று உயர்ந்த
விகுருதி வேள்வியுள் யூபமாய்ப் பசுவைப்பற்றிக் கோடலும்.

      63. செய்தாரின்மையின் உலகச்சொல் அன்றென.......
தீதியிசைக்கின்ற மந்திரங்கள்.

      61. கேள்வியுட் கிளந்த என்பது 'ஆடு கொளல்' 'வளப்பாடு
கொளல்' என்பவற்றோடு மியையும். அவையும் அதனுட்
சொல்லப்பட்டமையின்.

      வேள்விக்கிறைவனை 'ஆசான்' என்றார் தலைமைபற்றி.
அவனுரையாவது: வேதத்துள் நான்காம் வேற்றுமையை ஈறாகவுடைய
தெய்வப் பெயர்ச்சொல். அதனை உத்தேசத்தியாகம் என்ப; அச்சொல்லே
கடவுட்கு உருவென்பது சயிமினியாற் செய்யப்பட்ட வைதிக
நூற்றுணிபாகலின் அதனை 'உருபு' என்றும், யூபமாவது மாயோனாகச்
சொல்லப்படுதலால் பசுக்களைப் பிணித்துக் கொள்கின்ற அதனை
'உண்டி' என்றும்,

      ஊன்கணார்க்குப் படிமையினும் அந்தணர்க்கு வேள்வித் தீயினும்,
யோகிகட்கு உள்ளத்தினும், ஞானிகட்கு எவ்விடத்தும் வெளிப்படுதலாற்
சுடர்வளப்பாடு கோடலை 'அந்தணர் காணும் வரவு' என்றுங் கூறினார்.

69 - 76 வாயடை...................................எம்மறிவெனவே

      (இ - ள்.) வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைதர -
தேவர்களுக்கு உணவாகிய அமிழ்தத்தைப் பாற்கடலினின்றும் கடைந்து
அத் தேவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நினது திருவுள்ளத்தில்
நினைந்தபொழுதே, மூவா மரபும் ஓவாநோன்மையும் சாவாமரபின்
அமரர்க்காச் சென்ற - அவ்வமிழ்