பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்250

"வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான்றன் தாளிணையென் றலைமேலே"
(திருவாய்மொழி, 10-ப. 6: 5)
எனவும்,

"அவனருளாலே அவன்றாள் வணங்கி" எனவும், "காண்பார் யார்
கண்ணுதல் ஆய் காட்டாக்காலே" எனவும், நிகழும் பெரியோர் அருள்
மொழிகளையும் நினைக.

(பரிமே.) 15. நல்கினல்லது - வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது,
என்று ஏத்துகின்றார்:-

19 - 29: அராவணர் . . . . . . . . . .மாந்தீர்

(இ-ள்.) அணர் கயந்தலை அரா தம்முன் மார்பின் - கிளர்ந்த
மென்மையுடைய ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேடனின் அவதாரமாகிய
நம்பி மூத்தபிரானுடைய திருமார்பின்கண் அணியப்பட்ட நாலுகின்ற,
மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி - வெண்கடம்பின்
மலராற்றொடுத்த மாலைபோல மாட்சிமையுண்டாகக் காணப்பட்டு,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - அசையாநின்ற தனது அருவி
மிகவும் ஆரவாரித்து இழிதலானே, சிலம்பாறு அணிந்த - சிலம்பாற்றினை
அழகு செய்த, சீர்கெழு திருவின் சோலையொடு மாலிருங்குன்றம்
தொடர்மொழி - அழகு பொருந்திய திரு என்னும் சொல்லோடும் சோலை
என்னும் சொல்லோடும் மாலிருங்குன்றம் என்னும் சொல் தொடர்ந்த
மொழியாகிய, நாமத்தன்மை நன்கனம்படி எழ - திருமாலிருஞ்
சோலைமலை என்னும் பெயரினது பெருமை நன்றாக இந்
நிலவுலகத்தின்கண் பரவாநிற்ப, தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
யாமத்தன்மை - மகளிரும் மைந்தரும் தாம் ஒருவரை ஒருவர்
விரும்புதற்குக் காரணமான காமத்தை விதைத்து அதன் பயனை
விளைவிக்கும் கூதிர் யாமத்தைத் தனக்கு இயல்பாகவுடைய, இவ்
ஐ இருங் குன்றத்து - இந்த வியக்கத் தக்க இருங்குன்றத்தின்கண்ணே,
மன் புனல் இளவெயில் வளாவ இருள் வளர்வு என - நிலை பெற்ற
குளிர்ச்சியை யுடைய இளவெயில் தன்னைச் சூழாநிற்ப அதனிடையே
இருள் வளர்தலை ஒத்து, பொன் புனை உடுக்கையோன் -
பொன்னாடையினை அணிந்து திகழ்பவனாகிய மாயோன், புணர்ந்து
அமர் நிலை - நம்பி மூத்த பிரானோடு கூடி அமர்ந்து நிற்கின்ற
திருக்கோலத்தை, மாந்தீர் நினைமின் - மாந்தர்களே எல்லீரும்
நினைமின்கள்;