(வி-ம்.) அணர் கயந்தலை அராத் தம்முன் எனக் கூட்டுக.
அணர் - கிளர்ந்த; கய - மென்மை. அரா - பாம்பு; என்றது ஆதி
சேடனை. அராவின் அவதாரமாகிய தம்முன் என்க, தம்முன் என்றது
முறைப் பெயர்ப் பொருட்டாய் நில்லாது பலதேவன் என்னும் பெயர்ப்
பொருட்டாய் நின்றது. பலதேவன் - ஆதிசேடனுடைய அவதாரம்
என்பது புராணம்.
மரா வெண்கடம்பு. பலதேவன் மார்பின் வெண்கடப்பமாலை
இருங்குன்றத்தினின்றும் வீழும் அருவிக்கு உவமை என்க. அலங்கும் -
அசையாநின்ற. ஆர்த்திமிழ்பு: ஒருபொருட் பன்மொழி; மிக ஆரவாரித்து
என்க.
தன்கண் வீழும் அருவிகொண்டு சிலம்பாற்றை அணிசெய்த
இருங்
குன்றம் என முடிக்க. சீர் - அழகு. திருவினொடு என ஒடு உருபை
முன்னுங் கூட்டுக. மால் குன்றம் என்னும் இரண்டு சொல் புணர்ந்த
மொழியின்கண் முன்னின்ற சொல் திருவொடும் பின்னின்ற குன்றம்
என்பது சோலையொடும் நிரலே தொடர்ந்த நாமம் என்றவாறு. எனவே
திருமால் சோலைக் குன்றம் என்றாகும். அங்ஙனம் வழக்கின்மையின்
அப்பொருளின் வழங்கும் திருமாலிருஞ்சோலைமலை என்பார் நாமம்
என்றார். தன்மை - ஈண்டுப் பெருமை குறித்து நின்றது.
திருமாலிருஞ் சோலைமலை என்னும் நாமத்தின் பெருமை
உலகெலாம் பரவ என்றது, அதன்பெயர் சொல்லி ஏத்துமளவானே
இறைவன் திருவருள் நிரம்ப அருள்வான் என்பதனை உலகத்திலுள்ள
மாந்தர் எல்லாம் அறியும்படி என்றவாறு. அந் நாமத்தின் பெருமையை,
"திருமாலிருஞ் சோலைமலை என்றேன், என்னத்
திருமால்வந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தான்"
(திருவாய் - 10. 8; 1.)
எனவும்,
"அருளையீ என்னம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரம னம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கடியும் மணிமலை திருமாலிருஞ் சோலை மலையே"
(திருவாய் -10: 7: 7.)
எனவும் நம்மாழ்வார் ஓதுமாற்றானும் உணர்க.
படி - நிலவுலகம். குறிஞ்சிக்கு யாமம் சிறுபொழுதாகலின்,
யாமத்
தன்மை இருங்குன்றம் என்றார். நள்ளியாமம் போன்று எப்பொழுதும்
இருண்டுள்ள சோலைகளையுடைய மலை என்றும் ஒருபொருள்
தோன்றிற்று. ஐ - வியப்பு. இறைவனுடைய எனினுமாம்.
புனல்: குளிர்ச்சிக்கு ஆகுபெயர். இளவெயில் பொன்னாடைக்கும்,
இருள் மாயோனுக்கும் உவமைகள். நினைமின் என்றது நினையு
மளவானே வீறுபெறு துறக்கம் ஏறுதல் எளிதாம் என்பது பட நின்றது
மாந்தராகப் பிறந்தோர் செய்யத் தகுந்த செயல் இதுவே என்பார் 'மாந்தீர்'
என்றார்.
(பரிமே.) 19. அரவின் மெல்லிய தலையாற் கவிக்கப்பட்ட
தம்முன்.
|
|
|
|