பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்255

தற்குக் காரணமான திருமேனி என்க. மூவேழுலகமும் என்பார் 'எவ்வயின்
உலகத்தும்' என்றார்.

      இனி, எல்லா உலகத்தினும் பல்வேறு சமயம் பற்றிவாழும் மக்கட்
கூட்டத்தே அவ்வச் சமயத் தெய்வமாய் வெளிப்பட்டுப் பிறவித் துன்பம்
போக்குவோனாகிய கண்ணன் எனினுமாம். மன்பது - உயிர்த்தொகுதி.
மறுக்கம் - மயக்கம். மேஎ - பொருந்தி: குன்றத்தான் -
குன்றத்தின்கண் உள்ளான்.

      (பரிமே.) 49. புவ்வம் - நாபி: புவ்வம் என்பது பாகதச் சிதைவு.

      இவ்வளவும் குன்றத்தை ஏத்திக் கண்டார்க்கும் அதன் சிறப்புக்
கூறி, மேல் அதன்கணின்ற இருவரையும் வாழ்த்தி வேண்டிக்கொள்கின்றார்.

54-62: கள்ளணி . . . . .. . . . ..எனவாங்கு

      (இ-ள்.) கள் அணி பசுந் துளவினவை - தேன்துளிக்கும் அழகிய
பசிய துளவமாலையினையுடையை, கருங்குன்று அனையவை -
கரியமலையை ஒத்தனை, ஒள் ஒளியவை - மிக்க ஒளியினையுடையை,
ஒருகுழையவை - ஒற்றைக்குழையினையுடையை, புள் அணி பொலம்
கொடியவை - கருடப்பறவை எழுதிய அழகிய பொன்கொடியினை
யுடையை, வள்அணி வளை நாஞ்சிலவை - கூர்மை அணிந்த வளைந்த
கலப்பையினையுடையை, சலம்புரி தண்டு ஏந்தினவை - சினமிக்க
தண்டப்படையினை ஏந்தினை, வலம்புரி வய நேமியவை - வலம்புரிச்
சங்கினொடு வெற்றிமிக்க ஆழிப்படையினையும் உடையை, வரிசிலை வய
அம்பினவை - வரிந்த விற்படையுடனே வெற்றிமிக்க அம்புகளையுமுடையை,
புகர் இணர் சூழ் வட்டத்தவை - புள்ளி
ஒருங்குசூழ்ந்த பாராவளையினையுடையை, புகர் வாளவை - புள்ளிகள்
அமைந்த வாட்படையினையுடையை, என - என்று;

      (வி-ம்.) கள் - தேன். அணி - அழகு; பசுந்துளவினவை முதலியன
முன்னிலை ஒருமை வினைமுற்றாதல் (முன் கூறியதனால்) உணர்க. துளவு
- துளசி: கருங்குன்று திருமேனிக்கும் திருவுருவத்திற்கும் உவமை.
ஒள்ளொளி - மிக்கவொளி என்க. இறைவன் ஒளியுருவமானவன் ஆகலின்
ஒள்ளொளியை என்றார். புள் - கருடன். பொலம் - பொன். வள் -
கூர்மை. நாஞ்சில் - கலப்பை. சலம் - சினம்.

      இவ் வாழ்த்துக்களில் ஒள்ளொளியவை, ஒரு குழையவை வளை
நாஞ்சிலவை, தண்டேந்தினவை என்பன பலதேவனுக்குரியன,
பசுந்துளவினவை, கருங்குன்றனையவை, புள்ளணி பொலங்கொடியவை,
வலம்புரி வயநேமியவை வரிசிலை வயவம்பினவை வட்டத்தவை வாளவை
என்பன கண்ணனுக்குரியன என்றுணர்க. வலம்புரி - வலமாக
முறுக்குடைய சங்கு ஈண்டுப் பாஞ்சசன்யம். வய - வெற்றி: நேமி - ஆழிப்படை,
வட்டம், பாராவளை. சுழல் படை. ஈண்டுத் திரு