பதினாறாம் பாடல்
-------
வையை
பொருட் சுருக்கம்
இப் பாடல்: ஒரு தலைவன் காதற்பரத்தையுடன் நீராடி
வந்து
தோழியின்பால் வாயில்வேண்ட அவள், வையைநீர் விழாவை அவனுக்குக்
கூறுவாள் போன்று அவன் பரத்தைமையைக் குறிப்பாற் கூறி
வாயின்மறுப்பாளுடைய கூற்றாக அமைந்துளது.
1-4: வையையாற்றின்கண் நீர்பெருகி மலையிடத்துள்ள
மிளகு
சந்தனமரம் முதலியவற்றையும் பிற பொருள்களையும் கொணர்ந்து
பாண்டியன் வழங்குவதுபோல அலைகளாலே கரையிடத்தே வீசாநிற்கும்.
5-19: நீர்முத்துவடம் மத்தகநித்திலம் பொன்னணி
இளஞ்சிறார்
முஞ்சம் முதலியவற்றைக் கொணர்ந்து துறைகடோறும் பெருகாநின்றது;
வயல்கள் அந் நீரானே நாடக அரங்கம்போன்று அழகுபெற்றன;
பூம்பொழில்கள் தமக்கு விருந்தளித்த அந்நீர்க்கு எதிர்விருந்தளிப்பன
போன்று அதற்கு நறிய மலர்களை வழங்கின; அந்நீரானே
சோலைகளினும் குளங்களினும் ஆற்றிடைக் குறையினும் வண்டுகள்
தேன் உண்டு பாடும்படி மலர்கள் மிக்குத் திசையெலாம் பொலிவுற்றன.
20-31: வையைக் கரைக்கண் நீராடிநின்ற காதற்பரத்தையின்மேல்
அவளுடைய ஆயமகளிர் அரக்குநீரை மூங்கில் சிவிறியால் வீசினர்;
அந்நீர் அப் பரத்தையின் கொங்கையின் மேற்பட்டது; அதனை அவள்
துடையாது தனது ஆடையின் தானையால் ஒற்றி நின்றனள்; அப்பொழுது
அவள்பால் தலைவன் வந்தனன்; அவன் வரவினைக் கண்ட தோழியர்
'ஐய இவள் பூப்பெய்தினள்; அவளை அணுகாமல் அகலப்போ!' என்றனர்;
அவன் உண்மையுணர்ந்து நகைத்து அக் காதற் பரத்தையுடனே
இல்லிற்கேகி அவ் வரக்குநீரைத் துடைத்து அவளுடன் கூடி மகிழ்ந்தான்;
தோழியர் இல்லிலுள்ளார் கேட்கும்படி நங்கை பூத்தனள் பொலிக என்று
அசதியாடினர்; அதுகேட்ட காதற்பரத்தை நாணினள்; இங்ஙனம்
நாணும்படி செய்வது எப்பொழுதும் இவ் வையையின் இயல்பேயாகும். |
|
|
|