பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்26

தத்தின் பயனாகிய மூத்தலில்லாத முறைமையும் ஒழியாத ஆற்றலும்
அவருடைய இறவாத முறைமையே - போல அத்தேவர்களைச்
சென்றடைந்தன, நின் .......................மரபினோய்-(ஆகவே நினது பலவாகிய
புகழ்களும் பரவாநின்றன) அதனால் அத்தகைய உணர்தற்கரிய
முறைமையினை உடைய பெருமானே; நின் அடி - நினது திருவடியினை,
கலியில் நெஞ்சினேம் யாமும் - துளக்கமில்லாத நெஞ்சையுடைய
யாங்களும், பண்மாண் தலையுற வணங்கினேம் - பலகாலும் எம்தலை
நிலத்திலே பொருந்தும்படி விழுந்து வணங்கி, ஏத்தினேம் வாழ்த்தினேம்
- ஏத்தி வாழ்த்தி, எம் அறிவு கொடும்பாடு அறியற்க என -
எளியேங்களுடைய அறிவு பொருளல்லவற்றைப் பொருளாகக் கருதாமல்
மெய்ப்பொருளையே உணருவதாக என்று, கடும்பொடும் கடும்பொடும்
பரவுதும் - எம்முடைய சுற்றத்தார் பலரோடும் வேண்டிக்கொள்வோம்;

      (வி - ம்.) வாயடை - உணவு. மனத்தகத் தடைதர - நினைத்த
அளவிலே. மூவா மரபு - உடல் முதிர்தலில்லாத முறைமை. ஓவா -
ஒழியாத: நோன்மை - ஆற்றல். சாவா மரபு - இறவாத முறைமை.
நினைத்த மாத்திரையானே அமிழ்தம் உண்ணலால் உளதாம் பயனாகிய
இறவாமையும் மூவாமையும் அழியாத வலிமையும் தேவர்களை எய்தின
என்க. சாவாமரபுபோல ஏனை இரண்டும் சென்றெய்தின என்க.

      'சென்றநின்.............மரபினோய்' என்புழி விடுபட்டுப்போன
சொற்கள், 'நின் பல்புகழ் யாண்டும் பரந்தன' என்னும் பொருளுடையன
என்பது பரிமேலழகர் உரையினின்றும் உணரப்படும். வணங்கினேம்
ஏத்தினேம் வாழ்த்தினேம் என்பன முற்றெச்சங்கள். வணங்கி ஏத்தி
வாழ்த்தி என எச்சமாக்கிப் பரவுதும் என்னும் வினைமுற்றானே
முடித்திடுக.

      கடும்பு - சுற்றம். ஈண்டுச் சுற்றமாவார் இறைவனடியார் என்க.
பரவுதல் - வேண்டிக்கொள்ளுதல். கொடும்பாடு - பொய்யை
மெய்யென்றுணரும் மருள். கொடும்பாடறியற்க எனவே மெய்யினையே
உணர்வதாக என்றவாறாயிற்று.

      (பரிமே.) 69. வாயின்கண் அடுக்கப்படுதலின் உணவிற்கு 'வாயடை'
என்று பெயராயிற்று.

      75: 'கடும்பொடும் கடும்பொடும்' என்னும் அடுக்குப் பன்மைக்
கண் வந்தது.

      76: 'எம்மறிவு கொடும் பாடறியற்க' என மெய்யுணர்வையே
வேண்டினார் வீடு அதனாலல்லது எய்தப்படாமையின்.