பக்கம் எண் :

பரிபாடல்- வையை 265

ஒற்றி - தனது பெரிய ஆடையினது முன்றானையாலே ஒற்றி நிற்ப,
பெருந்தகை மீளி வருவானைத் தோழியர் கண்டு - அப்பொழுது
அக் காதற்பரத்தையின்பால் பேரழகும் மீளிமையும் உடைய தலைவன்
வாராநின்றானாக அவனை அத்தோழியர் கண்டு, பொய்யாற்றால் -
பொய் கூறு மாற்றானே அத் தலைவனை நோக்கி ஐய, பூத்தனள்
பொருந்தலை நீங்கு என - நங்கை பூப்பெய்தினாள் ஆதலாலே
அவளை அணுகாதேகொள் நீங்குக என்று கூறினாராக, தோற்றம்
ஓரொத்த மலர்கமழ் தண்சாந்தின் நாற்றத்தில் போற்றி - அதுகேட்ட
தலைவன் பூப்பின் தோற்றத்தை ஒருதலையாக ஒத்திருந்த மலர்மணங்
கமழும் சிவந்த அவ்வரக்குநீரின் நறுமணத்தாலே பூப்பின்மையை
அறிந்துவைத்தும், நகையொடும் போத்தந்து - தோழியர் செய்த
அசதியாட்டாலே தோன்றிய நகைப்புடனே அவ்விடத்தினின்றும் போந்து
ஊங்கு இருங் கடற்கு இவரும் யாறு என - இவ்விடத்தே பெரிய கடலிற்
புகுதற்குச் செல்லும் இவ் வையையாற்றுநீர் போன்று விரைந்து, தங்கான்
மகிழ - அவ்விடத்தே சிறிது பொழுதும் தங்காமல் விரைந்தும்
அப் பரத்தையோடும் இல்லிலே கூடி மகிழும்படி சென்று, களிப்பட்ட
தேன் தேறல் மாற்றி - அவ் வில்லிடத்தே களிப்புமிக்க பழத்தேனாற்
செய்த தேறலையும் பருகானாய், குறுகிக் குருதி துடையா - அக் காதற்
பரத்தையை அணுகி அவள் குரும்பை முலைமேற்பட்ட குருதிநிற
மமைந்த அரக்குநீரை நன்கு துடைத்து, மருவ - மருவாநிற்ப, இனியர்
பூத்தனள் நங்கை பொலிக என - அத் தோழியர் இல்லினுள்ளார்க்கு
இவ் வசதியாடலைக்கூறி நகைத்தற்பொருட்டு நம் நங்கை பூத்தனள்
அவள் பொலிவுடையளாகுக என வாழ்த்தாநிற்ப, நாணுதல் வாய்த்தன்று
- அதுகேட்டு அக் காதற்பரத்தை நாணுதலைப் பயந்தது;

      (வி-ம்.) சுருங்கை - குழாய், ஈண்டு நீர் வீசும் துருத்தி. இது
மூங்கிலாற் செய்யப்படுதலின் 'வேய்' என்றார் உரையாசிரியர். ஆயத்தார்
- தோழியர் கூட்டம். குரும்பை தெங்கங் குரும்பை, பனங்
குரும்பையுமாம். பூநீர் - மலர்மணமுடைய அரக்குநீர். எறிந்து என்னும்
எச்சத்தை எறிய எனச் செயவெனெச்சமாக்குக. பூநீர் துடையாள்
இருந்துகில் தானையான் ஒற்றி என இயைத்து நிற்ப என ஒரு சொல்
வருவித்துக் கூறுக. இருந்துகில் - பெரிய ஆடை. தானை - ஆடையின்
முகப்பு, பெருந்தகை - பெரிய அழகு. மீளி - மீட்கும் வன்மையுடைமை:
பொருந்தலை - பொருந்தாதே!, அவளை அணுகாதே என்றவாறு.
பூத்தனள் - பூப்பெய்தினள். பூத்தனள் என்றது. பொருந்தாது நீங்குதற்கு
ஏதுக்காட்டியவாறு. பொய்யாறு - பொய் பேசுநெறி. காட்சியாலே
பூப்போடு பெரிதும் ஒத்துள்ள தண்சாந்து என்க. தோற்றத்தானே
ஒத்திருப்பினும் அதன் மணத்தானே உண்மையறிந்து அவராடிய
அசதிகுறித்து நகைத்து என்க.