பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்273

உரை


1 - 8: தேம்படு . . . . . . . . . யாஅர்

      (இ-ள்.) கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ -
கோல்விளக்கும் இசைக்கருவிகளும் சந்தனம் முதலிய நறுமணப்
பொருள்களும் அகிற்புகையும் கொடிகளும் ஆகிய இவற்றைப் பலர்
ஏந்தித் தம்முடனே வாராநிற்ப, தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி
ஏந்துஇலை சுமந்து - தாம் தேன் விளைதற்கிடமான மலர் தழை
பூத்தொழிலையுடைய துகில் வடித்த மணி ஏந்தப்படும் இலையினையுடைய
வேல் என்னும் இவற்றைச் சுமந்துவந்து, விரிமலர் மதுவின் மரம்நனை
குன்றத்து அடியுறை - மலராநின்ற பூக்களினின்றும் ஒழுகும் தேனாலே
மரங்கள் நனைதற்குக் காரணமான வளப்பமுடைய திருப்பரங்குன்றத்து
அடியின்கண், வேலன் சாந்தம் விரைஇ விடை அரை அசைத்த கடிமரம்
உரையொடு பரவினர் - வேன்மகன் சந்தனந் தெளித்து
ஆட்டுக்கிடாயினை அடியிலே கட்டின முருகவேளின் பூசனைக்குரிய
மரமாகிய கடம்பை உரையாலே புகழ்ந்தனராய், பண்ணிய இசையினர்
- ஆளத்தியாலாக்கிய இசையை உடையராய், மாலைமாலை இயைநர்
- மாலைப்பொழுது தோறும் தங்கும் வழக்கமுடையோருள், மேலோர்
உறையுளும் வேண்டுநர் யாஅர் - மேனிலை உலகத்தின்கண்ணும்
உறைதலை விரும்புவாருளராவரோ?

      (வி-ம்.) கோல் எரி - தீவர்த்தி: கோலின் நுனியில் துணி சுற்றி
எண்ணெயிட்டு ஏற்றுவதொரு விளக்காதலின் இது கோலெரி எனப்பட்டது
இக்காலத்தார் 'தீவட்டி' என்பதுமிது. கொளை - இசை; ஆகுபெயரான்
இசைக்கருவிகளுக்காயிற்று. நறை - சந்தனம் குங்கிலியம் முதலிய
நறுமணப் பொருள்கள். புகை மணப்புகை. கொடி - கோழிக் கொடி;
மயிற்கொடியுமாம். தம்மோடு பிறர் ஏந்தி வர என்பார் 'ஒருங்கு எழ'
என்றார். தேம் - தேன். குழை - தளிர். வடிமணி - வார்த்த மணி;
தெளிந்த ஓசையுடைய மணியுமாம். ஏந்திலை: அன்மொழித் தொகை:
வேல் என்னும் பொருட்டு.

      வேலனால் சந்தனம் தெளிக்கப்பட்டுக் கிடாயினை அடியிலே
கட்டப்பட்ட கடிமரம் என்க. கடிமரம்: கடி. ஈண்டுச் சிறப்பு என்னும்
பொருட்டு; முருகவேள் பூசனைக்குச் சிறந்துரிமையுடைய (கடப்ப) மரம்
என்பதாம். விடை - ஆட்டுக்கிடாய். "மதவலி நிலைஇய மாத்தாட்
கொழுவிடை" (திருமுருகு - 232) என்புழியும் அஃதப் பொருட்டாதலுணர்க.

      ஆட்டுக்கிடாய் பலிகொடுத்தற் பொருட்டுக் கட்டப்பட்டது என்க.
உரையொடு பரவினர் என மாறுக. ஒடுவுருபு கருவிப் பொருள் குறித்து
நின்றது. பண்ணிய - ஆக்கிய; ஆளத்தியாலாக்கிய இசை என்க
ஆளத்தியாவது:

ப.--18