பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்275

முழவினது முழக்கம் எழாநிற்ப, ஒருதிறம் அண்ணல் நெடுவரை அருவி
நீர் ததும்ப - மற்றொருசார் தலைமைத் தன்மையுடைய நெடிய
சிகரங்களினின்றும் வீழும் அருவிநீர் ஆரவாரியாநிற்ப, ஒருதிறம்
பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க - மற்றொருசார் பாடற் றொழிலிலே
நல்ல ஆடன் மகளிர் அசைந்தாடாநிற்ப, ஒருதிறம் வாடை உளர்
வயின் பூங்கொடி நுடங்க - மற்றொருசார் காற்று அசைந்தவிடத்துப்
பூங்கொடிகள் அசையாநிற்ப, ஒருதிறம் பாடினி முரலும் பாலை
அங்குரலின் நீடு கிளர் கிழமை நிறை குறைதோன்ற - மற்றொருசார்
பாண்மகள் பாடாநின்ற, பாலைப்பண்ணாகிய அழகிய மிடற்றுப் பாடலின்
நெடிய கிளர்ச்சியுடைய நாலுதாக்குடைய கிழமையும் நிறையும் இரண்டு
தாக்குடைய குறையும் தோன்றாநிற்ப, ஒருதிறம் சீர் ஆடு மஞ்ஞை
அரிகுரல் தோன்ற - மற்றொருசார் சீருக்கு இயைய ஆடாநின்ற
மயிலினது அரிந்த குரல் தோன்றா நிற்ப, மாறுமாறு உற்றனபோல்
மாறு எதிர் கோடல் உடைத்து - இவ்வாறாக ஒன்றற் கொன்று வேறு
வேறாகும் தன்மை யுற்றன போன்ற இவ்விசை மாறுபாடுகளை ஏற்றுக்
கொள்ளுதலை உடையதாகும்:

      (வி-ம்.) குன்றம் இவ்விசை மாறுபாட்டினை ஏற்றுக்கொள்ளல்
உடைத்து என்க.

இஃதென் சொல்லியவாறோ எனின், யாழிசைக்கு மாறாக வண்டிசைப்பவும்.
குழலிசைக்கு மாறாகத் தும்பி இசைப்பவும், முழவிசைக்கு மாறாக அருவி
யிசைப்பவும், விறலியர் ஆடற்கு மாறாகப் பூங்கொடிகள் ஆடவும்,
பாடினியின் நிறை கிழமை குறைகளின் தோற்றத்திற்கு மாறாக மயிலின்
அரிக்குரல் தோன்றாநிற்பவும், இவ்வாறாக மாறட்டான் குன்று பாடலும்
ஆடலுமாகிய இக் கலைகளுக்கு மாறுபாடாவன சிலவற்றையும் தன்பால்
உடைத்து என்றவாறு. அவை உண்மையில் மாறுபாடுடையன
அல்லவாகலின் 'மாறுமாறுற்றன போன் மாறு' என்றார். எனவே,
திருப்பரங்குன்றத்தின்கண் கலையின்பமும் இயற்கையின்பமும்
எப்பொழுதும் நிரம்பியிருக்கும் என்றவாறு.

      வண்டிற்கு யாணர் ஆவது புதிது புதிதாக மலர்கள் தோன்றுதல்
என்க. இதுவும் மலைவளத்திற்குக் குறிப்பேதுவாதல் உணர்க. இமிரிசை:
வினைத்தொகை. கண் - கணு. கரைபு - கரைதல்; இசை. பண்ணார் -
பண்போன்ற. பரந்த இசை: பரந்த என்பதன் ஈற்றுயிர் கெட்டுப் பரந்திசை
என நின்றது செய்யுள் விகாரம். மண் - மார்ச்சனை. முழவு - மத்தளம்.
அண்ணல் நெடுவரை - தலைமைத் தன்மையுடைய சிகரம் என்க. ததும்ப
-முழங்க; "ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப" (புறநா- 194,) என்புழியும்
அஃதப் பொருட்டாதலுணர்க.

      வாடை என்பது ஈண்டு வடகாற்று என்னும் பொருள் குறியாது
வாளா காற்று என்னுந்துணையாய் நின்றது. பாடினி - பாணிச்சி. பாலை
அங்குரல் - பாலைப்பண்ணின் அழகிய இசை என்க. கிழமை