பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்276

நிறை குறை என்பன ஆளத்தியின் பாகுபாடுகள். இதனை "இசைப்
புலவன் ஆளத்திவைத்த பண்ணீர்மையை முதலும் முறைமையும் முடிவும்
நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும்
நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினாலும் அறிந்து"
(சிலப்-8; 41-2.) எனவரும் அடியார்க்கு நல்லார் நல்லுரையானும் உணர்க.

      தாக்கு - இசைத்தொழில் எட்டனுள் ஒன்று: என்னை? "எடுத்தல்,
படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு." என்னுமிவை
இசைக்கிரியைகள் என்பவாகலின்.

      மயிலின் குரல் கிழமை நிறை குறையுடைய பாலையிசையை
ஒத்தது என்றவாறு.

      மாறு - பகை. மாறட்டான்: முருகன்.

      (பரிமே.) 15. பாடுதல் நல்ல விறலியர்; வினையது நன்மை
வினை முதன்மேனின்றது.

      17-8. பாலையையுயை அழகிய மிடற்றுப் பாடற்கண் நாலு
தாக்குடைய கிழமையும் இரண்டு தாக்குடைய . . . . .குறையும் தோன்ற.

      20. கல்விகளால் மாறுமாறாந்தன்மை யுற்றனபோல இகலை
ஏற்றுக் கோடல்.

22-27: பாடல் . . . . . . . . . இயங்கு மாறின்று

      (இ-ள்.) பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடலொடு பரங்குன்றின்
இடை - நல்லிசைப் புலவரின் பாடல் அமைந்து மேலும் பலவேறு புகழும்
முற்றுப்பெற்ற மதுரைக்கும் திருப்பரங்குன்றிற்கும் இடையே கிடந்த நிலம்,
நணிநணித்தாயினும் - மிகவும் அணித்தேயாயினும், கமழ் நறுஞ்சாந்தின்
அவரவர் - மணங்கமழாநின்ற நறிய சாந்தினை அணிந்த ஆடவரும்,
மகளிரும், திளைப்பச் சேஎய்ச் சேய்த்து - நெருங்கி விளையாடுதலானே
மிகவும் சேயதாகாநின்றது, மகிழ்மிகு தேஎம் கோதையர் கூந்தல்
குஞ்சியில் சோர்ந்த - மகிழ்ச்சி மிக்க தேன்றுளிக்கும் மாலையினையுடைய
அம் மகளிர் மைந்தருடைய கூந்தலினின்றும் குஞ்சியினின்றும் வீழ்ந்த,
அவிழ் இதழின் - அவிழ்ந்த மாலையாலே தடுக்கப்பட்டு, இயங்கும் ஆறு
இன்று - அவ்விடை நிலத்தே செல்லுதற்குரிய வழி இல்லையாயிற்று;

      (வி-ம்.) நல்லிசைப் புலவர்களின் பாடல் அமைந்து என்க. ஈதல்
போர் வென்றி முதலிய பல்வேறு புகழானும் நிரம்பி என்க. பாடல்சான்று
பல்புகழ் முற்றிய என்னுமிது கூடற்கும் திருப்பரங்குன்றத்திற்கும் பொது.
இடை - இடைக்கிடந்த நிலம். மிகவும் நணித்து, மிகவும் சேய்த்து என்க.
நணித்து - அண்மைத்து; சேய்த்து - தூரியது. கூந்தல் - மகளிர் கூந்தல்.
குஞ்சி - ஆடவர் குஞ்சி என்க. இதழின் - மாலையாலே. இயங்குமாறு
- செல்வழி.