பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்279

      (வி-ம்.) கீழோர் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்உள்ள வேளாளர். வார்:
வார்கின்ற - ஒழுகுகின்ற; நெடிய எனினுமாம் வார்வெள்ளருவி ஆனாது
பரந்து கீழோர் வயல் பரக்கும் என மாறுக.

      மேலோர் - மேலிடத்துள்ளோர். நீலமணி என மாறுக. செறு.
வயல் - பண்பட்ட வயலின்கண் கற்கள் கிடத்தலும் அப் பண்பாட்டிற்கு
அழிவே தருதலின். 'மணி செறு உழக்கும்' என்றார். இது செல்வமிகுதி.
நீர்வள முதலியவற்றை உணர்த்தியபடியாம். தெய்வவிழா - ஈண்டுத்
தலைவியர் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு விரைவின்
வருதற்பொருட்டும் அவர்க்கு வினை வாய்க்கும் பொருட்டும் இறைவனை
வேண்டி எடுக்கும் விழா என்க. இங்ஙனம் மகளிர் வேண்டுதலை "கனவிற்
றொட்டது கை பிழையாகாது நனவிற் சேஎப்ப நின் நளிபுனல் வையை
வருபுனல் அணிகெனவரங் கொள்வோரும்." "செய்பொருள் வாய்க்கெனச்
செவி சார்த்து வோரும்." "ஐ அமர் அடுகென அருச்சிப்போரும்,"
எனவரும் இந்நூல் 8-ம் பாடற் பகுதிகளானும் உணர்க.

      முன்னர் (40) 'வார் வெள்ளருவி' என்றாராகலின் (43)
'அவ் வெள்ளருவி' என்று சுட்டினார். குன்றிற்கும் வையைக்கும்
கூடற்கும் என்பன வேற்றுமை மயக்கம். ஏழனுருபு விரித்தோதுக.

      தொய்யா - கெடாத. வையைக்கண் விருந்து செய்தலாவது
அத் தலைவரோடே கூடிப் புதுப்புனலாடுதல் என்க. கை ஊழ்:
முன்பின்னாக மாறித் தொக்க உம்மைத் தொகை; ஊழும் கையும்
என்க. ஊழ் - ஈண்டுக் காரணம் என்னும் பொருள் குறித்தும்,
கை - காரியம் என்னும் பொருள் குறித்தும் நின்றன. தம்மில் காரண
காரியமாகத் தடுமாறுதலாவது இல்லிலிருந்து விருந்தயர்தல் காரணமாகத்
தலைவன் பிரியத் தலைவி விழாவயர்தலாகிய காரியம் நிகழ்வதாயிற்று.
மீண்டும் அவ்விழாக் காரணமாகத் தலைவன் பொருள்தேடி மீண்டு வந்து
விருந்தயர்வு ஆகிய காரியம் நிகழ்வதாயிற்று. எனவே, விருந்தயர்தல்
காரணமாய் விழவும் விழவுகாரணமாய் விருந்தயர்தலும் எனக் காரண
காரியங்களாய்த் தடுமாறியவாறு காண்க. அரோ: இரண்டும் அசைகள்.

      தெய்வம் போற்றலும் விருந்தோம்பலும் ஆகிய இரண்டு செயலும்
இல்லறமே ஆகலின் இரண்டும் அவர்க்கு அறவொழுக்கமே யாயின
என்க.

      (பரிமே.) 42. தெய்வவிழா - பிரிந்த தலைவர் வினைமுடித்துக்
கடிதின் வந்து கூடுதற்குத் தலைவியர் செய்யும் தெய்வவிழா.

      46. காரண காரியங்களாய்த் தடுமாறி வருதல். (நன்று.) இல்லற
நெறியாதலின் அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று.

      கற்புடைமகளிரும் தலைவரது அறம் நிமித்தமாகப் பூசைசெய்து
அதன்பயன் நுகர்வர் என்றலின், இதுவும் கடவுள் மேலதாயிற்று.

      இவ்வளவும் முருகனது பரங்குன்றத்தைப் புகழ்ந்து, மேல் அவனை
எதிர்முகமாக்கி வாழ்த்துகின்றார்.