பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்28

      47 - 50: அநாதியாய் வருகின்ற மரபினையுடைய வேதத்திற்கு
முதல்வனே! விரிந்தகன்ற ஆகமங்கள் அனைத்தானும்,
அகங்காரத்தானும், மனத்தானும், உணர்வினானும், மற்றும்
எல்லாவற்றானும் நினக்கு வனப்பும், எல்லையும், அறியப்படாத
மரபினோய்!;

      51 - 61: அமரர்களுக்கு முதல்வன் நீ; அவுணர்களுக்கும் நீயே
முதல்வன்; அதனால், நினக்குப் பகைவரும் நண்பரும் உளரோ. கருடன
் தனது செருக்கடங்கி ஊழிகள் பல ஓ என்று கதறுவதற்குக்
காரணமானவனும், அவ்வூழி முதல்வனும் நீயே;

      62 - 72: நின் தன்மைகளை மெய்ந் நூல்கள் கூறுதலானே,
யாங்களும் அவற்றை இவ்வாறு அறிந்துள்ளோம்:-
"தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;
நீ உறைவதும் இல்லை; உறையும் இடமும் இல்லை. மறவியுடையார்
மறவியில் சிறப்புப் பெறுதல் காரணமாக அவை நினக்கு உளவாந்
தன்மையும் பொய்; நீ மேற் சொல்லிய தன்மை உடையை ஆதலின்.
படைத்தல் முதலிய தொழில் வேற்றுமை பற்றி நீ பிறவாப் பிறப்பில்லை;
நின்னைப் பிறப்பித்தோரும் இலர்;

      73 - 80: காயாமலர் மேனியோனே! அருள் குடையாகவும்,
அறம் காம்பாகவும் கொண்டு, பொதுமை நீக்கித் தனி நின்று உலகினைக்
காக்கும் தொழிலை உடையை. நிலமுதலாகப் புருடன் ஈறாகவுள்ள
இருபத்தைந்து தத்துவங்களானும் ஊழிதோறும் மெய்க்காட்சியாளரான்
ஆராயப்படும் பெருமையுடையை நீ;

      81 - 94: வாசுதேவனே! சங்கருடணனே! பிரத்தியும் நனே!
அநிருத்தனே! கூத்தாடுங்கால் ஆய்ச்சியரின் இடமும் வலமும்
ஆயினோய்! குடக் கூத்திற்கு எடுத்த குடத்தையுடையோனே!
கலப்பையுடையோனே! கோவலனே! காவலனே! யாவரானும்
அறியப்படாதவனே! அன்பர் நினைவின்கண் இருப்போனே!
அழிவில்லாதவனே! அரசனே! புலவனே! பாணனே!
துளவமணிந்தோனே! சங்கையுடையோனே!