பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்282

பதினெட்டாம் பாடல்
-----

செவ்வேள்

பொருட் சுருக்கம்:

      1-6: தம்முள் கூடிப் போரை ஏற்ற அவுணரது பெருமிதம்கெடக்
கடற்பரப்பினுள் பரந்து சுற்றிய சூரபன்மாவாகிய மாமரத்தை
அழித்தோனே! நீ விரும்புதலால் இப் பரங்குன்று நின்னையீன்ற
இமயம்போலப் புகழ்பெற்றது.

      7-14: ஒரு கானவன் திருப்பரங்குன்றத்தின்கண் ஆலும்
மயிலைநோக்கி அதன் அழகையும் களிப்பினையும் நெஞ்சாலே
குறிக்கொண்டு நின்றான்; அதுகண்ட அவன் காதலி, நீ அம்
மயிலைநோக்கி நினைத்ததறிந்தேன்; நீ எம்மை நோக்காது
இகழாநின்றனை என்று ஊடினாள்; அவள் ஊடிய தறிந்த அக் கானவன்
காதலுடையோய்! அம் மயில் கொள்ளற்கரிய நினது சாயலைக்
களவுகொள்ள எண்ணி, அதுதான் பெறாது வருந்தாநின்றது; இதனைக்
கண்டு நினது சாயலருமையை நினைத்தேனாக, நீ என்னை இகழ்ந்ததாகக்
கருதா நின்றனை என, அவ் வூடலை அப்பொழுதே தீர்த்தனன்; இஃது
இப் பரங்குன்றத்தின் இயல்பு ஆகும்.

      15-21: ஒரு தலைவன் தலைவியின் ஊடல் தீர்த்தற்குப் பாணனை
அவள்பால் விடுத்தான்; அப் பாணன் தலைவியிடம் வந்து தலைவன்
தூயன் என்னும் பொருளுடைய பாட்டைப் பாடினான்; அதுகேட்ட
தலைவி, 'ஏடா! தலைவன் உடம்பிலுள்ள வடுக்களே அவன் பரத்தமையை
எமக்குணர்த்த யாம் அறிந்தேம்; நின் பாட்டுப் பொய்வளம் பூத்தன'
என்றாள்.

      22-37: வேலையுடையவனே! நினது திருப்பரங்குன்றத்தின் சிகரம்
தன்பால் முகில் முழங்கி மின்னப்படுதலானே நினது ஓடையையுடைய
களிற்றை ஒக்கும்; நினது குன்றத்தின்கண் உள்ள எழுதெழில் அம்பலம்
காமவேளின் படைக்கலக் கொட்டிலை ஒக்கும்; மலர்செறிந்த
சோலைகளும் சுனைகளும் அக் காமவேளின் அம்புப்புட்டிலை ஒக்கும்;
காந்தட்பூக்கள் அவன் போரிற்றோற்றுக் கட்டுண்டார் கைகளை ஒக்கும்;
தும்பியினாலே கட்டவிழ்க்கப்படும் காந்தள் முகைகள் யாழ்நரம்பின்
கட்டவிழ்ப்பாருடைய கைகளை ஒக்கும்.