செருவேற் றானைச் செல்வநின் அடியுறை
55 உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப்
பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே.
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு; நல்லச்சுதனார் இசை;
பண் காந்தாரம்.
உரை
1 - 6: போர் . . . . . . . . .இக் குன்று
(இ-ள்.) எதிர்ந்து போர் ஏற்றார் மதுகை மதம்
தப - தம்முள்
கூடிநின்று நின்னோடு போர்த்தொழிலை ஏற்றுக்கொண்ட
அவுணர்களுடைய வலிகாரணமாக உண்டாகிய செருக்குக் கெட,
நீர்நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து - நீரைப் பரந்து ஏற்ற
நிலத்தால் தாங்கப்படும் கடற்பரப்பினுள், கார்எதிர்ந்து கமம் சூல்ஏற்ற
எழிலிபோல் - கார்ப்பருவத்தை எதிர்ந்து நிறைந்த சூல்கொண்ட
முகில்போல் இருண்டு, நிரந்து சுற்றிய சூர்மா தபுத்த வேலோய்
- பரந்து சுற்றிய சூரபன்மாவை அழித்தவனே, நின் சீர் நிரந்து ஏந்திய
குன்றொடு - நின்னைப் பெற்றதனாலே உண்டாகிய புகழைத் தான்
பரந்துநின்று தாங்கிய இமயமலையோடு, நேர்நிரந்து ஏறுமாறு ஏற்கும்
இக்குன்று - நேர்நின்று ஏறுமாறாதலை ஏற்கும் நீ விரும்பி எழுந்தருளிய
இத் திருப்பரங்குன்று.
(வி-ம்.) எதிர்ந்து போர் ஏற்றார் என மாறுக.
எதிர்ந்து
தம்முட் கூடி என்க. போர் ஏற்றார் என்றது அவுணரை. மதுகை - வலி.
கார் - கார்காலம். கமம் - நிறைவு. எழிலி - மேகம்: மேகம்போலக்
கடற் பரப்பினுள் சுற்றிய சூர்மா என்க. சூர்மாவை அழித்தமை அவுணர்
மதங்கெட ஏதுவென்க. மதம் - செருக்கு; பெருமிதம் என்பர்
பரிமேலழகர். நிரந்து - பரந்து; நேர்நிரந்து - நேர்நின்று. சூர் மா
எனக் கூட்டுக. தபுத்த - அழித்த. சீர் - புகழ்: புகழின் பெருமை
தோன்ற இமயந்தானும் அகன்றுநின்று ஏந்தியதென்பார் 'நின்சீர் நிரந்து
ஏந்திய குன்று' என்றார். ஏறுமாறு - மாறுபாடு: 'பகைப்போர் வலி புகழ்
முதலியவற்றால் ஒப்பாய்நின்றே பகைப்பராகலின் இமயத்தோடு ஒத்து
நின்று ஏறுமாறு ஏற்கும்' என்றார். இப்பரங்குன்று என்றது நீ விரும்பி
எழுந்தருளிய சிறப்புடைய இப்பரங்குன்று என்பதுபட நின்றது.
(பரிமே.) மதந்தப மா தபுத்தோயென இயையும்.
2. விசும்பின்கட் பரந்து கார்காலத்தை எதிர்ந்த,
நீ விரும்புதலால்
இப் பரங்குன்று நின்னைப் பயந்த இமயம்போலப் புகழ்பெற்றது என்றவாறு.
|