பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்292

      (பரிமே.) இவ்வளவும் மலைச்சிறப்புக்கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்றார்.

51-56: புரியுறு . . . . . . . . . சுற்றமோடுடனே

      (இ-ள்.) செரு வேல் தானைச் செல்வ - போர்வென்றியையுடைய
வேற்படையேந்திய செல்வனே! நினது பூசைக்கண், புரியுறு நரம்பும்
இயலும் புணர்ந்து - முறுக்குதல் உற்ற யாழ் நரம்பினது இசையும்,
நல்லிசைப் புலவர் பாடிய இயற்பாடல்களும் பொருந்தி, சுருதியும் பூவும்
சுடரும் கூடி - வேத வொலியும் உபசாரமாகிய மலர்களும் விளக்குகளும்
கூடி, எரி உருகும் அகிலோடு ஆரமும் கமழும் - தீயிலிடப்பட்டு உருகும்
அகிற் புகையும் சந்தனப்புகையும் கமழாநிற்கும், நின் அடியுறை - நினது
திருவடியின்கண் உறைதலை, எம் சுற்றமோடுடனே - யாம் எம்
சுற்றத்தாரோடு ஒருங்கு கூடி, உரிதின் உறைபதி சேர்ந்தாங்கு -
எமக்குரித்தாகிய ஊரின்கண் உறையுமாறு போல, பிரியாதிருக்க -
எப்பொழுதும் பிரியாது உரிமையோடு உறைவேமாக; அங்ஙனம்
உறையும்படி அருள்புரிவாயாக;

      (வி-ம்.) புரி - முறுக்குதல். நரம்பு ஆகுபெயராய் அதன்
இசையைக் குறித்து நின்றது. இயல் என்றது, நல்லிசைப்புலவர் பாடிய
இயற்பாட்டுக்களை. அவையாவன:- திருமுருகாற்றுப்படை போல்வன
என்க. கருதி - வேதம். பூ, சுடர் முதலியன பூசையில் இறைவனுக்குச்
செய்யப்படும் உபசாரங்கள். இவை பதினாறு வகைப்படும். அவையாவன:-
ஆவாகநம், தாபநம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம்,
தேநுமுத்திரை, பாத்தியம், ஆசம நீயம், அருக்கியம், புட்பதாநம் தூபம்,
தீபம், நைவேத்தியம், பாநீயம், செபசமர்ப்பநை, ஆராத்திகை
என்பனவாம். இவை சைவ சமயிகள் கூறும் உபசாரம். இவ் வுபசாரம்
சமயங்கடோறும் வேறு படுதலும் உண்டு.

      எரி - தீ. அகிலும் சந்தனமும் இட்டு எழுப்பிய நறும்புகை கமழா
நின்ற நினது திருவடி என்க. செரு - போர். போரின்கண்
வென்றியையுடைய வேல் என்க. உலகத்திலுள்ள எல்லாப் பொருளும்
இறைவனுடைய உடைமையே ஆதலின் செல்வ என்று விளித்தார்.
இதனை,

"எல்லாம் உன்னுடைமையே எல்லாம்உன் அடிமையே
எல்லாம் உன்னுடைய செயலே!"
(தாயுமானவர்)

எனவரும் ஆன்றோர் மெய்ம்மொழியானும் உணர்க.

      யாங்கள் எம்முடைய ஊரின்கண் உரிமையோடு உறைதல் போன்று
நினது திருவடி நீழலிலே என்றும் பிரியாதுறைதலை விரும்புகின்றேம்;
அங்ஙனமே உறையுமாறு அருள்புரிக என்று வேண்டிய படியாம்.
அங்ஙனமே உறையுமாறு அருள்புரிக என்பது இசை யெச்சப்பொருள்.