பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்295

இளமகளிர் சுனையில் வீழும்படி உதிர்த்து விளையாடினர்; அத் தளிர்கள்
அச் சுனையிலுள்ள நீர்ப்பூவையும் அரும்புகளையும் பொருந்தித்
தலைதூக்கிக் கிடந்தன; பின்னர் அச்சுனையருகே வந்த மகளிர் சிலர்,
அவற்றுள் மலர்ந்த மலரோடு கிடந்த பூங்கொத்தினைக் கண்டு இஃது
ஐந்து தலைப்பாம்பு என்றும், அதனருகே பேரரும்போடு
கிடந்ததொன்றனை இஃது அதன் மூத்த பிள்ளை என்றும், சிறிய
அரும்போடு கிடந்ததொன்றனை இஃது அதன் இளையபிள்ளை என்றும்
கருதி மயங்கா நின்றனர்.

      75 - 84: அதனருகே பச்சிலையின் இளங்கொழுந்தும் ஆம்பலும்,
காந்தளும், பஞ்சாய்க் கோரையும், வேங்கையும், தோன்றியும், நறவமும்,
கோங்கமும், இலவமும் ஆகிய இவையெல்லாம், கட்டிய மாலைகள்
போன்று செறிந்தும், கோத்தமாலை போன்று நிறம் மாறுபட்டும், தொடுத்த
மாலைகள் போல இடையிட்டும், தூக்கிக்கட்டின மாலைகள்போல
நெருங்கியும் பூத்தன. இங்ஙனம் விரவிப்பூத்த மலர்ப்பரப்பு நின்
பரங்குன்றத்தின்கண் விடியற் காலத்திலே பன்னிற முகில்கள் நிறைந்த
வானப்பரப்புப் போன்று விளங்கும்.

      85 - 94: மணமான மகளிரும், கன்னி மகளிரும், நின்
பரங்குன்றத்தை அடைந்து, நினது கொடியேற்றப்படும் யானையின்
கும்பத்தைக் குங்குமத்தாலே அணிசெய்து மலரும் நீருந் தூவிச்
செவிக்கவரிகளைச் சாத்திப் பொற்குடையை மேலே கவித்து வழிபட்டனர்:
அவ் வழிபாட்டின்கண் அந்த யானை யுண்டெஞ்சிய கவளத்தை அவர்கள்
உவந்து உண்டனர்; அங்ஙனம் உண்ணா விடின், அம் மகளிர் நிரலே
தங்கா தலர் அன்பையும், கண்ணிறைந்த கணவரையும் எய்தார்.

      95 - 96: குறக்கொடியை மணந்தவனே! எம் வாழ்த்தினை நின்
செவிக்குச் சிறப்புணவாக ஏற்றருள்க.

      97 - 103: நின் ஆடையும் மாலையும் சிவந்தன; நின்
வேற்படையும் பவழம் போன்ற நிறமுடையதே; நின் திருமேனி செந்தீயை
ஒக்கும்; திருமுகம் இளஞாயிற்றை ஒக்கும்; சூரபன்மாவை அழித்தோனே!
குருகு மலையில் வேலை எறிந்து அதனை உடைத்தோனே!

      103 - 105: நீ இம் மலையில் கடப்பமரத்தின்கண் விரும்பிப்
பொருந்திய நிலையை உடன்மேவிய சுற்றத்தாரொடு ஏத்தித் தொழுது
வாழ்த்தினேம். எமக்கு அருள்புரிவாயாக!