நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்
தருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன்
இருநிலத் தோரும் இயைகென ஈத்தநின்
5 தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத் தவளொடு
மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை
புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடற்
கலப்போ டியைந்த இரவுத்தீர் எல்லை
10 அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார்
சிறந்தோர் உலகம் படருநர் போல
உரிமாண் புனைகலம் ஒண்டுகில் தாங்கிப்
புரிமாண் புரவியர் போக்கமை தேரர்
தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின்
15 குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு
நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய
தார்போலு மாலைத் தலைநிறையால் தண்மணல்
ஆர்வேலை யாத்திரைசெல் யாறு;
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
20 புடைவரு சூழல் புலமாண் வழுதி
மடமயி லோரு மனையவ ரோடும்
கடனறி காரியக் கண்ணவ ரோடுநின்
சூருறை குன்றிற் றடவரை யேறிமேற்
பாடு வலந்திரி பண்பிற் பழமதிச்
25 சூடி யசையுஞ் சுவன்மிசைத் தானையிற்
பாடிய நாவிற் பரந்த வுவகையின்
நாடு நகரு மடைய அடைந்தனைத்தே
படுமணி யானை நெடியோய்நீ மேய
கடிநகர் சூழ்நுவலுங் கால்;
30 தும்பி தொடர்கதுப்ப தும்பி தொடராட்டி
வம்பணி பூங்கயிற்று வாங்கி மரனசைப்பார்
வண்டார்ப் புரவி வழிநீங்க வாங்குவார்
திண்டேர் வழியிற் செலநிறுப்பார் கண்டக்
கரும்பு கவழ மடுப்பார் நிரந்து
|
|