துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்விடு பிழைமணம் எனவே"
எனவரும் செய்யுள்களான் உணர்க.
(பரிமே.) அலங்காரத்தையுடைய வதுவை என இயையும்.
8 - 18: புலத்தினும் . . . . . . . .யாறு
(இ - ள்.) புலத்தினும் போரினும் போர் தோலாக்
கூடல் -
பெருமானே நின்னை வழிபடும் பொருட்டு அறிவாலும் மறத்தாலும்
செய்யும் சொற்போர் படைப்போர் என்னும் இருவகைப் போரிடத்தும்
தோற்றலின்றி வெல்லும் இயல்புடைய மதுரையின்கண் வாழும் மகளிரும்
மைந்தரும் ஆகிய மக்கள், கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை -
புணர்ச்சி யின்பத்தோடே வந்து பொருந்திய அவ் வின்பவிரவு நீங்கிய
வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து, பெரிது அறம் ஆற்றி அதன்
பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல - இவ்வுலகத்தே
பெரிதும் அறத்தைச் செய்து அவ் வறத்தின் பயனாகிய இன்பத்தை
நுகரும்பொருட்டு வானவர் உலகத்திற்கு மகிழ்ந்து செல்வார் போன்று,
உரி மாண் புனைகலம் ஒண் துகில் தாங்கி - தத்தமக்கு உரிய
மாண்புடைய அணிகலன்களையும் ஆடைகளையும் அணிந்துகொண்டு,
புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் - கண்டோர் விரும்புதல்
மாட்சிமையுடைய குதிரைகளை ஊர்வோரும் நல்ல ஓட்டம் அமைந்த
தேர்களை ஊர்வோருமாய், தெரிமலர்த்தாரர் - ஆராய்ந்து புனைந்த
மலர்மாலைகளை அணிந்தோருமாய், தெருவு இருள் சீப்ப - தங்கள்
அணிகலங்களின் சுடர் அத் தெருவின்கட் படர்ந்த
அவ் வைகறையிருளை அகற்றும்படி போந்து, நின் குன்றொடு கூடல்
இடை எல்லாம் ஒன்றுபு - நினது திருப்பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும்
இடையிலே கிடந்த நிலமெல்லாம் நெருங்கி, யாத்திரை செல் ஆறு -
யாத்திரை செல்லாநின்ற வழி, மாலைத் தலை நிறையால் - அவர் தம்
மலர்மாலையணிந்த தலைகள் இடைவெளியின்றி நிறைதலானே, நேர்பூ
நிறைபெய்து இருநிலம் பூட்டிய தார் போலும் - நினது குன்றின்மேல்
நின்று நோக்குவார்க்கு ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டிப் பெரிய
நில மகளுக்குச் சூட்டப்பட்டதொரு மாலைபோன்று தோன்றாநிற்கும்,
ஆர் தண் மணல் வேலை - அவர்கள் ஆரவாரிக்கும் முழக்கம்,
குளிர்ந்த மணற்பரப்பிலே மோதி முழங்கும் கடல் முழக்கம் போன்று
கேளாநிற்கும்;
(வி-ம்.) புலம் - அறிவு. அறிவுப்போர் என்றது,
புலவர்
பட்டிமண்டபம் ஏறி இயற்றும் சொற்போர். போரினும் என்றது மறத் |
|
|
|