கொண்மார் - கொள்ளும் பொருட்டு.
உரி - உரிமை. புனைகலம் -
அணிகலம். போக்கு - நல்ல ஓட்டம். தெரிமலர் - ஆராய்ந்த மலர்.
ஒன்றுபு - நெருங்கி. நேர்பூ - தம்முள் ஒத்த மலர். யாத்திரை செல்லா
நின்றவழி செல்வார்தம் மலர் சூட்டிய தலைகள் இடைவெளியின்றி
நிறைதலானே நிலமகட்கு இட்டதொரு மாலைபோலத் தோன்றும் என்க.
அவர்தம் ஆர் வேலை போலும் என்க. ஆர் - ஆரவாரம்.
போரினும் என்பதன்கண் உள்ள போர் என்பதும், கூடல்
என்பதும் ஆகுபெயர்கள். மறம், கூடலில் வாழ்வோர் என்னும் பொருளன.
(பரிமே.) சீப்ப என்னும் எச்சத்திற்கு முடிபாகிய
போந்து என்னுஞ்
சொல் வருவிக்கப்பட்டது. தாங்கிப் புரவியராய்த்
தேரராய்த்
தாரராய் வைகறைக்கட் போந்து நெருங்கிப் படருநர்போலச்
செல்கின்றவழி தார்போலும் என்க.
19 - 29: சுடரொடு . . . . . .. நுவலுங்கால்
(இ - ள்.) படுமணி யானை நெடியாய் - ஒலிபடாநின்ற
மணியையணிந்த பிணிமுகம் என்னும் களிற்றையும் நீண்ட 'புகழையும்
உடைய பெருமானே!, புலம் மாண் வழுதி - அறிவு மாட்சிமைப்பட்ட
பாண்டியன், மடமயில் மனையவரோடும் - மடப்பமுடைய மயில்போன்ற
சாயலையுடைய தன் மனைவிமாரோடும், கடன்அறி காரியக்
கண்ணவரோடும் - வினைக் கடமைகளை அறிந்த தன் கண்ணாகிய
அமைச்சரோடுங் கூடி, பழமதி சூடி சுவல்மிசை அசையும் தானையின்
பாடிய நாவின் பரந்த உவகையின் நாடும் நகரும் அடைந்து - பழைய
வரிசையாலே சூடப்பட்டுப் பிடரிற் கிடந்து அசையாநின்ற துகிலினை
உடையரும் நின்னை ஏத்திப்புகழ்ந்து பாடாநின்ற நாவினையுடையரும்
மிகுந்த மகிழ்ச்சியுடை யருமாய் நாட்டிலுள்ளோரும் நகரத்திலுள்ளோரும்
வந்து தன்னைச் சூழாநிற்ப, நின் சூர் உறை குன்றில் தடவரை ஏறி -
நின் சூரரமகளிர் உறைதற்கு இடமான திருப்பரங்குன்றினது பெரிய
சிகரத்தின்மேலே ஏறி, பாடுவலம் திரிபண்பின் - பெருமையுண்டாக
வலமாக வருகின்ற பண்பினோடே, நீ மேய கடிநகர் சூழ் நுவலுங்கால் -
நீ எழுந்தருளிய திருக்கோயிலைச் சுற்றுதலை உவமை கூறுமிடத்து, சுடர்
சூழ்வரு தாரகையோடு மேருப்புடைவரு சூழல் அனைத்து -
திங்கண்மண்டிலம் தன்னைச் சூழ்ந்து வரும் விண்மீன்களோடே
மேருமலையின் பக்கத்தே அதனைச் சுற்றுதலை ஒக்கும் என்னலாம்;
(வி - ம்.) படுமணி - ஓசையுண்டாகும் மணி. யானை
- முருகப்
பெருமான் ஊர்தியாகிய பிணிமுகம் என்னும் களிற்றியானை என்க.
நெடியாய் என்றது அளத்தற்கியலாதபடி நீண்டவனே என்று
இறையிலக்கணம் உரைத்தவாறு. என்னை? |
|
|
|