பக்கம் எண் :

பரிபாடல்- வையை 318

நோக்கி, 'ஏடி! நீ சிந்தித்த அளவிலே பாவம் நீங்குதற்குரிய கற்புடைய
இத்தலைவியைச் சினந்து சில சொல்லிப் பாவம் செய்தனை; அது நீங்க
இவளை வணங்க வருவாயாக' என்றனர். அது கேட்ட பரத்தை, 'இஃது
என்றும் ஒழியாததொரு துன்பமாக முடிந்தது' என்று மனத்துள் எண்ணி,
அம் முதுமகளிருள் ஒருத்தியை நோக்கி 'அன்னையே! மாற்றாளை
மாற்றாள் வணங்குதல் பெருமையன்று' என்று கூறினாள்.

      74 - 78: பின்னர்த் தலைவி பரத்தையை நோக்கி "ஏடி நீ நினது
பெருமையை எமக்குச் சொல்லிக் காட்டவேண்டா! என் தந்தை
எனக்கிட்ட இவ் வளையலும் ஆரமும் நினக்கு வந்த வழி களவுவழி
யன்றாயின், நினக்கு இவற்றைத் தந்தவனை எமக்குக் காட்டிப் பின்னர்
நின் பெருமையைக் கூறுக" என்றாள்.

      76 - 83: அதுகேட்ட பரத்தை "அதிரற்கண்ணியை உடையோய்;
நின் அன்பன் எனக்கும் அன்பன்; ஆதலால் இவ்வணிகளை எமக்கு
விலையாக அவன் தந்தான், இன்னும் நின் சிலம்புகளையும் கழற்றி
எனக்குத் தருவான்; யான் கள்வி அல்லேன்; அவனே கள்வன்!
அவனைத் தொடர்க" என்றாள்;

      84 - 97: அப்பொழுது ஆண்டுவந்த மகளிருட் சிலர்
அப் பரத்தையை நோக்கி, 'மானே! நும்மை விரும்பிக் காமுகர் நுமக்கு
வழங்கிய பொருள் நும்முடையனவே" என்று அவள் சினத்தைத்
தணித்துப் பின்னர்த் தலைவியை நோக்கி, பூங்கொடியே! பரத்தையர்
இன்பம் விரும்பிச் செல்வானைச் செல்லாமற் றடுத்தலும், சென்றான்
என்று நீக்கி ஒழுகுதலும், மனைவியர்க்குக் கூடுமோ? கூடா, குலமகளிர்
கணவன் தம்மை இகழினும் அவனைத் தாம்போற்றும் இயல்புடையர்
அல்லரோ! பரத்தையர்பாற் செல்லும் கணவரொடு அளவளாவாமல்
இருப்பேம் என்றிருத்தலும் முடிவு போகாது அன்றோ? ஆடவர் காமம்
தக்கவிடத்தே மட்டும் நிற்கும் தன்மையுடையதன்று என்று தேற்றினர்.
இத்தகைய துனியும் புலவியும் உண்டாகும் படி செய்தது வையை.

      98 - 107: மகளிர் கைபோன்ற முகையினையும், பாம்பு
படம்விரித்தாற் போன்றும் குடைவிரித்தாற் போன்றும் மலரும்
மலர்களையும் உடைய காந்தளினையும், நீர்ப்பூக்களையும், பிற
பூக்களையும் அருவி கொணர்ந்து தர, அவற்றைத் திரைக்கையாலே
தள்ளிக் கொணர்ந்த வையை, மதுரை மதிற் சுருங்கையினூடு புக்கு
நீரைச்சொரியும் தோற்றம் களிறுகள் தம் கையை உயர எடுத்து
நீர்சொரிவதை ஒக்கும்.