பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்32

உரை

1 - 3: மாஅயோயே . . .. . . . . . . மாஅயோயே

      (இ - ள்.) மாஅயோயே மாஅயோயே - திருமாலே! திருமாலே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி - அடியார்களது
பிறவித்துன்பத்தை ஒழித்து வீட்டின்பத்தை நல்கும் குற்றமற்ற சிவந்த
திருவடிகளையும், மணிதிகழ் உருபின்- நீல மணிபோலும்
திருமேனியையும் உடைய திருமாலே;

      (வி-ம்.) மாயோன் என்பது கருநிறமுடையன் என்னும் பொருள்
குறியாமல் திருமால் என்னும் பெயரளவானே நின்றது; மறுபிறப்பு
என்றது ஈண்டுப் பிறவிப்பிணி என்பது பட நின்றது. அன்பாலே நினைந்து
வழிபடுவார் பிறவிப்பிணியை அகற்றி வீடு நல்குவது திருவடியே
ஆதலின், அதனையே முன்னர் நினைந்தோதினார்; பிறப்பற்ற விடத்து
வீடே ஆகலின் பிறப்பறுத்து வீடுநல்கும் சேவடி என விரித்துக் கூறுக;
அத் திருவடியைப் பெறுதற்கு முகம் - புகுதலானே பல காலும் விளித்து
எதிர்முகமாக்குகின்றார்.

4 - 14: தீவளி . . . . .. . . . . அந்தணர் அருமறை

      (இ-ள்) தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும்
அறனும் - நெருப்பும் காற்றும் வானமும் நிலமும் நீருமாகிய ஐம்பெரும
் பூதங்களும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும், ஐவரும் -
கோள்களில் ஒழிந்த செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும்
ஐவரும், திதியின் சிறாரும் - அசுரர்களும், விதியின் மக்களும்-விதியின்
மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும், மாசு இல் எண்மரும் -
குற்றமில்லாத வசுக்கள் எண்மரும், பதினொரு கபிலரும் - பதினோர்
உருத்திரர்களும், தாமா இருவரும் - அச்சுவனி தேவர் இருவரும்,
தருமனும் - இயமனும், மடங்கலும் - அவன் ஏவலனாகிய கூற்றுவனும்,
மூவேழ் உலகமும் - முத்திறத்து, இருபத்தோர் உலகங்களும்,
அவ்வுலகின் மன்பதும் - அவ்வுலகினுள் வாழும் உயிர்க் கூட்டங்களும்,
ஆயோய் - ஆகி விரிந்தவனே!, நின்வயின் பரந்தவை மாயா
வாய்மொழி உரைதர வலந்து உரைத்தேம் - இங்ஙனம்
நின்னிடத்தினின்றும் விரிந்த பொருள்களை அழியாத வேதங்
கூறுதலானே யாங்களும் முறைப்படி கூறாது முன்னும் பின்னுமாக
மாறிமாறிக் கூறாநின்றேம், வாய்மொழி ஓடை மலர்ந்த - அவ்வேதமாகிய
நீரோடையில் மலர்ந்த, தாமரைப் பூவினுள் பிறந்தோனும் - தாமரை
மலரிற் பிறந்த பிரமதேவனும், தந்தையும் - அவனுடைய தந்தையும், நீ
என - நீயே என்று, மொழியுமால் அந்தணர் அருமறை - கூறாநிற்கும்
அவ்வந்தணருடைய வேதம்;