பக்கம் எண் :

பரிபாடல்- வையை 322

   கொடியியலார் கைபோற் குவிந்த முகை
   அரவுடன் றவைபோல் விரிந்த குலை
100 குடைவிரிந் தவைபோலக் கோலு மலர்
   சுனைகழிந்து தூங்குவன நீரின்மலர்
   சினைவிரிந் துதிர்ந்தவீப் புதல்விரி போதொடும்
   அருவி சொரிந்த திரையிற் றுரந்து
   நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து
105 கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும்
   நெடுநீர் மலிபுன னீண்மாடக் கூடற்
   கடிமதில் பெய்யும் பொழுது;
   நாமமா ரூடலு நட்புந் தணப்புங்
   காமுங் கள்ளுங் கலந்துடன் பாராட்டத்
110 தாமமர் காதலரொ டாடப் புணர்வித்தல்
   பூமலி வையைக் கியல்பு.
என்பது, பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச்
சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையை நீர் விழவணியுங் கூறியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு; நல்லச்சுதனார் இசை;
பண் காந்தாரம்

உரை

1-5: கடல் . . . . . . . . கழீஇயின்று

(இ-ள்.) சூல் முதிர் முகில் - சூல் முற்றிய முகில், மலை மாலை முற்றுபு
முற்றுபு - மலை ஒழுங்கினைச் சூழ்ந்து சூழ்ந்து, உடல் உரும் ஏறு இனம்
ஆர்ப்ப - சினவாநின்ற இடியேற்றுத் திரள் ஆரவாரிக்கும்படி, கடல்
குறை படுத்த நீர் கல் குறைபட எறிந்து பெய்து - கடல் வற்றும்படி
முகந்து கொணர்ந்த நீரை அம்மலையினது கற்கள் துணிபடும்படி வீசிப்
பொழிந்து, பொருது இகல் புலிபோழ்ந்த பூநுதல் எழில் யானைக்கோட்டுக்
குருதி அழிகறை தெளிபெறக் கழீஇயின்று - தன்னோடு போரிட்டு
மாறுபட்ட புலியைக் குத்திப் பிளந்த பொலிவுடைய நெற்றியையுடைய
யானையது கோட்டின்கண் உள்ளதாகிய குருதியினாலாகிய மிக்க
களங்கத்தை அக்கோடு தெளிவு பெறும்படி கழுவிற்று;