பக்கம் எண் :

பரிபாடல்- வையை 324

பாணன் தலைவனுக்கு அவன் தலைவிக்குக் கூறிவந்த கார்ப்பருவவரவினைக்
குறிப்பாக உணர்த்தியபடியாம். வெங்கார் மணம் - நீண்டநாள் மழை
வறந்துவிட வெயிலானே பெரிதும் சுடப்பட்ட நிலத்தின்மேல் புதுவதாக மழை
பொழிந்தவுடன் அந் நிலத்திலுள்ள வெப்பத்தானே நிலத்தின்கண் ஒருவகை
ஆவி எழுந்து பரவாநிற்கும்; அந்த ஆவி ஒரு வகை மணமும் உடைத்தாம்;
அந்த மணமே வெங்கார் மணம் என்று கூறப்பட்டது. இக் காலத்தாரும்
கோடை வெயிலான் உலர்ந்து கிடக்கும் நிலத்தை வெங்கார் கிடந்த நிலம்
என்றும், அந் நிலத்தே மழைபெய்து விடின், நிலம் வெங்கார் அழிந்து கெட்டது
என்றும் வழங்குதல் காணலாம். இந்த மணம் கற்புடைய மகளிரின் மேனி
மணத்திற்கு உவமை கூறப்படுதலுண்டு. இதனை,

"சுடுமண் மிசைமாரி சொரியச்சூழ்ந்து சுமந்தெழுந்து
நெடுநன் னிமிராவி நாறுநெய்தோய் தளிர்மேனி
துடிநுண் ணிடைப்பெருந் தோட்டுவர்வாய் ஏழைமலர்மார்பன்
கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக்காமக் கடலாழ்ந்தான்"
எனவரும் சீவக சிந்தாமணியானும் (2503) உணர்க.

12 - 22: தன்னாற்றம் . . . . . . . . அணிந்தவர்

      (இ-ள்.) தடம் பொழில் தன் நாற்றம் மீது யாற்று வெம் நாற்று வேசனை
நாற்றம் - வையையினது இருகரைகளினும் உள்ள பெரிய பொழிலினது
மணத்தின் மேலாக அவ்வையையினது வெம்மையாலே தோற்றுதலையுடைய
பரவுதலையுடைய வெங்கார் மணத்தை, குதுகுதுப்ப ஊர் ஊர் தோறும் -
நுகர்ந்து குதுகுதுப்பனவாகிய ஊர்கள் தோறும். பறை ஒலி கொண்டன்று -
அப் புதுநீர் வருகையை மக்கட்கு உணர்த்தும் பொருட்டு முழக்கும் பறை
முழங்கிற்று, (26) கூடல் - மதுரை மாநகரத்தின்கண் உள்ள மக்கள், உயர்
மதிலில் நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ - அந் நகரத்து உயரிய
மதிலிடத்திலுள்ள சுருங்கையில் அவ்வையை நீர் புக்கு ஓடாநின்ற
முழக்கத்தாலே உறக்கம் நீங்கி எழுந்து, திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்
- திண்ணிய தேரின்கண் ஏறக்கருதுவார், அத் தேரிற் பூட்டுதற்குரிய
குதிரைகளைப் பள்ளியோட வண்டிகளிலே பூட்டி அதன்கண் ஏறாநிற்பவும்,
வங்கம் பாண்டியில் திண் தேர் ஊரவும் - பள்ளியோட வண்டியில் ஏறக்
கருதுவோர் அவ்வண்டியிற் பூட்டுதற்குரிய எருதுகளைத் தேரின்கட் பூட்டி
அதன்கண் ஏறிச் செலுத்தாநிற்பவும், வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்
- வலிய குதிரைகளை ஒப்பனை செய்தற்குரிய கலனை முதலியவற்றால்
யானைகளை ஒப்பனை செய்யாநிற்பவும், கயம் மா பேணிக் கலவாது ஊரவும்
- சிலர் யானை குதிரை என்னுமிவற்றைப் போற்றி ஒப்பனை சேர்த்தாமல்
வறிதே ஊராநிற்பவும், மகளிர் கோதை மைந்தர்