". . . . . . . . . சோழன்
எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்டு
இலம்பா டுழந்தவென் இரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின மிடற்றியாக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ வருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே"
(புறநா- 378)
எனவரும் புறப்பாட்டையும் ஒப்பு நோக்குக.
வங்கம் - பள்ளியோடம் என்னும் வண்டி. பாண்டி -
எருது.
வயமா - குதிரை. பண்ணுந - பண்ணுறுத்துதற்குரிய பொருள். மதமா
யானை. கயமா: உம்மைத்தொகை, கயமும் மாவும் என்க. கலவாது -
ஒப்பனை சேர்த்தாமல்.
23 - 26: ஆடுவார் . . . . . . வையை
(இ - ள்.) ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர்
மணல் கோடு
எருத்தத்து இரும் புனலின் குறுகி - விளையாடும் பருவத்து மகளிருடைய
சிற்றில் அழகு செய்யப்பட்ட வண்டு பாடும் மணலானாய கரையது
பிடரியை வந்து தொடப்பெருகிய பெரிய வெள்ளத்தைச் சென்று
அணுகாநிற்கவும், மாட மறுகின் மருவி மறுகுற - முன் கூறி யாங்கு
முறைமறந் தணிந்த முந்திச் சென்றோர் ஒழிய ஏனையோர்
மாடங்களையுடைய தெருவின் கண்ணே வந்து மேலே செல்லுதற்கு வழி
பெறாராய் வருந்தா நிற்பவும், தகை வையை விழையும் தகைத்து
- இங்ஙனமாக அழகிய வையையாறு அம் மதுரையில் வாழும் மக்கள்
பெரிதும் விரும்புமொரு தன்மையுடைத்தாயிற்று;
(வி - ம்.) ஆடுவார் - விளையாட்டுப் பருவமுடைய மகளிர்.
பொய்தல் - சிற்றில், மணல் வீடு. வையைக் கரையின்கண் சிறுமிகள்
சிற்றில் இழைத்து ஆடலின் அச் சிற்றில் அக் கரையை அணிசெய்த
என்க. வண்டு இமிர் மணற்கோடு என்றது, தடம்பொழிலுடைய
மணற்கோடு என்றவாறு. கோடு - கரை. எருத்தென்றது
அக்கரையுச்சியினின்று சிறிது கீழுள்ள கரைப்பகுதியை. இரும்புனல்
- வெள்ளம். மறுகு - தெரு. மறுகுற - வருந்த. |
|
|
|