பக்கம் எண் :

பரிபாடல்- வையை 329

40 - 47: ஆங்கு . . . . . . . திகைத்து

      (இ-ள்.) ஆங்கு - அவ்விடத்தே, வையை கடல்மடுத்தால் என
- வையையாறு கடலிலே சென்று புகுந்தாற்போன்று, செறி பெண் நிரை
ஒய்யப் போவாளை - செறிந்த அம் மகளிர் திரளிலே புக்கு மறைந்து
தப்பப் போகின்ற அப் பரத்தையை, இவ் வாணுதல் உறழ்ந்தோள் என
- அத் தோழியர் இவ் வொளியுடைய நெற்றியினையுடைய பரத்தை
நந் தலைவிக்கு மாற்றாளே என ஐயமறத் தெளிந்து, நெறிமணல்
செறிபெண் நிரைநேடினர் செல்ல - அவளைக் காணும்பொருட்டு
நெறிந்த அம் மணற் பரப்பிலே குழுமிய. அம் மகளிர் திரளினூடே
புகுந்து அவளைத் தேடினராய்த் தொடர்ந்து செல்லாநிற்ப, மாற்றாள்
மகள் - மாற்றாளாகிய அப் பரத்தை அங்ஙனம் தன்னை அவ்
வாயத்தார் தொடர்வதனை அறிந்து, வல் உறழ்பு - அவரொடு மிக
மாறுபட்டு, சொல் ஏற்று - பேசுதலைத் துணிந்து மேற்கொண்டு, யாது
தொடர்பு என்ன மறலினாள் - நீயிர் என்னை இங்ஙனம் தொடர்ந்து
வருதற்குரிய காரணந்தான் என்னையோ என்று கூறி, எதிர்த்தாள்,
செறிநகை சித்தம் திகைத்து வாய்வாளா நின்றாள் - அங்ஙனம்
அப் பரத்தை எதிர்த்த அளவிலே அத்தோழியரைப்
பின்தொடர்ந்துசென்ற செறிந்த பற்களையுடைய தலைவி நெஞ்சந்
திகைத்து யாதொன்றும் சொல்லமாட்டாதவளாய் வாளாநிற்பாளாயினள்;

      (வி-ம்.) உறழ்ந்தோள் - மாற்றாள். என (42) என்பதனை
உறழ்ந்தோள் என எனவும் கூட்டுக வையை கடல் மடுத்தால் என,
என மாறுக. வையை பரத்தைக்கும் கடல் மகளிர் திரளுக்கும் உவமை.
தெய்ய - அசைச்சொல். நெறி - நெறித்தல்: அறல்படுதல். நேடினர் -
தேடினர். செறிபெண்நிரை என மாறி நெறிமணல் செறிபெண்ணிரை
நேடினர் என்று இயைத்துக்கொள்க, செறிநகை: அன்மொழித் தொகை;
தலைவி என்னும் பொருட்டு. அப் பரத்தை மாறுபட்டெதிர்த்து
உரையாடத் தொடங்குமுன் குலமகளாகலின் சித்தம் திகைத்து
நிற்பாளாயினள் என்க.

      (பரிமே.) 44. பெண்சாதி நிரைந்த நிரைக்கண்ணே;

      44-5. அத் தலைவி சித்தந்திகைத்து ஒன்றுஞ் சொல்லாது நின்றாள்.

      (48- முதல் 66, ஏச என்னுந் துணையும் ஒரு தோழி கூற்று)

48 - 54: ஆயத்தொருத்தி . . . . . . முதுசாடி

      (இ-ள்.) ஆயத்து ஒருத்தி - அங்ஙனம் எதிர்ந்தபொழுது
அத்தோழியருள் வைத்து ஒரு தோழி, அவளை - அப்பரத்தையை,
அமர் காமம் மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை -
விரும்பப்படும் காமவின்பத்தைப் பெரிய பொய்யோடு கலந்து