(வீ-ம்.) இனி, அவ்விறைவனிடமிருந்து தோன்றிய உலகத் தோற்றம்
கூறத்தொடங்குகின்றார். தொடங்குபவர் முதலில் இறைவன்
வடிவங்களாகத் திகழும் எண்வகை வடிவங்களையும் கூறுகின்றார்.
அவையாவன: வானம், காற்று, தீ, நீர், நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும்
; ஞாயிறு திங்கள், வேள்வி முதல்வன் (இயமானன்) ஆகிய மூன்றும்
ஆம். இவ்வெட்டினையும் "அட்டமூர்த்தங்கள்" என்ப. இனிக் கோள்கள்
ஒன்பதனுள் ஞாயிறுந்திங்களும் எண்வகை வடிவங்களுள்
அடங்குதலானும், இராகு கேதுக்கள் காணப்படாதனவாகலானும்,
எஞ்சியவற்றைப் பெயர் கூறாது ஐவரும் எனத் தொகை கூறியொழிந்தார்.
ஐவர் என்றது செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்னும் கோள்
ஐந்தனையும் என்க. திதியின் சிறார் என்றது அசுரர்களை, காசிபன்
என்னும் முனிவனுக்குத் திதி என்பாளிடத்து அசுரர் தோன்றினர் என்பது
புராணகதை. இதனை,
"தக்கனனி வயிற்றுதித்தா ரைம்பதின்மர்
தடங்கொங்கைத் தைய லாருள்
தொக்கபதின் மூவரையக் காசிபனும்
புணர்ந்தனனத் தோகை மாருள்
மிக்கஅதி திப்பெயராள் முப்பத்து
முக்கோடி விண்ணோர் ஈந்தாள்
மைக்கருங்கண் திதிஎன்பாள் அதினிரட்டி
அசுரர்தமை வயிறு வாய்த்தாள்"
(கம்ப - சடாயுகாண் - 25)
எனவருஞ் செய்யுளானும் உணர்க.
விதியின் மக்கள் என்றது ஆதித்தர் பன்னிருவரையும்;
பதினொரு
பிரமர்களுள் ஒருவனாகிய காசிபன் ஈண்டு விதி எனப்பட்டான்;
ஆதித்தர் பன்னிருவரும் காசிபன் மக்கள் என்பது புராணகதை. எண்மர்
- வசுக்கள்; கபிலர் - உருத்திரர். இவர் கபிலநிறமுடையராதல் பற்றிக்
கபிலர் எனப்பட்டார். தாமா தாவும் குதிரை. அச்சுவனிதேவர் குதிரை
வயிற்றிற் பிறந்தவர் ஆதலான் குதிரை என ஆகுபெயராற் குறித்தார்.
மன்பது - நிலைபெற்ற உயிர்க்கூட்டம்.
(பரிமே.) 5. வேட்கின்ற வடிவு தருமமாதலின் அஃது
அறன் எனப்பட்டது.
8. தேவ மருத்துவரைத் தாவும் மாவின்கண் தோன்றிய
இருவர்
என்றார்: உருப்பசி குதிரைப்பெட்டை யாகியாளைக் கண்டு நயந்து, தானும்
குதிரை வடிவினனாய் அவள்பாற் செல்கின்ற ஆதித்தனுடைய நாசிகைத்
துளைகளால் இரண்டு வீரிய விந்துக்கள் வீழ, அவர் அங்கே
இரட்டைகளாய்த் தோன்றினராதலின்,
தருமன் - யமன்; மடங்கல் - அவன் ஏவல் செய்யும்
கூற்றம்.
9. மூவேழுலகம் - ஒரோவொன்று எழுவகைப்பட்ட
மூன்றுலகம். மன்பது - ஒழிந்த உயிர்ப்பன்மை.
ப. - 3 |
|
|
|