தடம் மெல்தோள் தொட்டு -
தமது பெரிய தோளாகிய தறியிலே கட்டி,
தகைத்து - தடுத்துக்கொண்டு, இட்டார்க்கு மடவிரலால் யாழ் ஆர்த்தும்
பாணியில் - நிரம்பப் பொருள் வழங்குவார்க்குக் காமவின்பத்தை
மிகுவிக்கும் பொருட்டு இளமையையுடைய விரல்களாலே யாழினை
வருடி இசையெழுப்பி அதன் இன்பத்தை ஊட்டும்பொழுதே, எம்
இழையைத்தொட்டு ஆர்த்தும் - எம்முடைய வளையும் ஆரமுமாகிய
அணிகலன்களையும் அணிந்து கொண்டு அவற்றாலாய அழகினையும்
அக்காமுகருக்கு ஊட்டும், இன்பத் துறைப்பொதுவி - இன்பம்
வழங்குதலிலே இவ் வையையின் நீராடுந்துறைபோலப்
பொதுமையுடையவளே;
(வி - ம்.) மடம் - பெண்மைக்குணம் நான்கனுள் ஒன்று.
மதர்
- களிப்பு: கண்பார்வை பட்டவுடன் காமுகர் மயங்கித் தன்பால் வரச்
செய்தலால் கண்ணைக் கயிறாக உருவகித்தார்.
"ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு"
(18: 104-7)
என்றார் மணிமேகலையினும்.
கயிறு என்றதற்கேற்பத் தோளாகிய தறி என்க. தொட்டு
- கட்டி
மடவிரல் - இளைமைத்தன்மையுடைய விரல் என்க. மெல்விரல்
என்றவாறு. இசை காமக்குணத்தை மிகுவிக்குமியல்புடையதாகலின்,
யாழிசை எழுப்பி நுகர்வித்து என்பது கருத்து.
இட்டார் - பொருள் நிரம்ப வழங்கியோர்க்கு என்க.
'பொருளிலாதாரைக் கண்ணாலும் நோக்காது இட்டார்க்கே ஆர்த்தும்
பொருட் பெண்டிர்' என்பார் 'இட்டார்க்கு ஆர்த்தும்' என்றார். என்னை?
"நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்"
(மணி 18: 19-20)
என்றும்,
"பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிரை"
(மணி. 18: 108 9)
என்றும் வருதல் காண்க.
பாணி - காலம்: ஆர்த்தும் காலத்தே என்க. ஆர்த்துதல்
-
நுகர்வித்தல். எம்மிழை - எமது அணிகலன். தலைவிக்கும் தனக்கும்
வேற்றுமை கருதாமல் 'எம்மிழை' என்றாள். நின்னுடைய புற அழகு
தானும் எம்மிழை யணிந்தமையானே உண்டாவதாம் என்று இகழ்ந்த
படியாம். |
|
|
|