பக்கம் எண் :

பரிபாடல்- வையை 339

எடுத்தவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்கு"
(சிலப். வேனிற் - 74 - 110)

எனக் கூறுமாற்றானே உணர்க.

காக்கை - காத்தல். காக்கையும் கடிந்தொழுகலும் எனும் எண்ணும்மை
தொக்கன. தகவு - கற்பு. சான்றாண்மை சான்றார் - சால்புடைமை
மிக்கவர். சால்புடைமையாவது: நற்குணங்கள் பலவற்றானும் நிறைந்து
அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுதல். இன்னாசெய்தார்க்கும் இனியவே
செய்யும் இயல்புடைய குலமகளிர் தங்கேள்வர் இகழினும் தங்கடமையிற்
பிறழாது ஏத்தி இறைஞ்சுவர் என்பது கருத்து.

      நிகழ்வது - நிகழ்ச்சி; என்றது உலகியலை. அமர்பு - விரும்பி.
அகலம் - மார்பு. முடிபொருள் - கடைபோக மேற்கொள்ளும் பொருள்.
நிற்கக் கடவ இடம் என்றது மைந்தர்காமம் கற்புடைமகளிர்பால் மட்டும்
நிற்குமோ என்றவாறு. ஆங்கு: அசை.

      (பரிமே.) அடுக்குப் பன்மைபற்றி வந்தது.

      94. காமம் தக்குழி நிற்குமோ?

      95. என - என்று அவ்வணிநோக்கி வருவார் சொல்ல.

      96 - 97: இன்ன . . . . . . சிறப்பு

      (இ - ள்.) இன்ன துனியும் புலவியும் இத்தன்மையவாகிய
துனியையும் ஊடலையும், தென்னவன் வையை ஏற்பிக்கும் - பாண்டியனது
வையையாறு ஏற்கச்செய்யும்; சிறப்பு - இப் பண்பு இவ் வையை
யாற்றிற்கே சிறந்துரிமை யுடையதொரு பண்பாகும்;

      (வி - ம்.) துனி - முதிர்ந்த கலாம். புலவி - இளைய கலாம்.
"துனியும் புலவியும் இல்லாயிற் காமம், கனியும் கருக்காயும் அற்று"
(குறள் - 1306) என்பவாகலின் வையை காதலர்க்குத் துனியும் புலவியும்
தந்து அவர்தம் காமவின்பத்தைச் செவ்வியுற மிகுவிக்கும் என்று
பாராட்டிய படியாம்.

      இனி (98) கொடியியலார் என்பது தொடங்கிப் பாணன்
தலைவனுக்குக் கார்ப்பருவ வரவினை நினைவூட்டுகின்றான்.

98 - 108: கொடி . . . . . . . பொழுது

      (இ - ள்.) கொடியியலார் கைபோல் குவிந்த முகை -
பூங்கொடிபோன்ற அழகினையுடைய மகளிரினது குவிந்த கைபோலக்
குவிந்த காந்தள் அரும்புகளும், அரவு உடன்றவை போல் விரிந்த குலை
- நாகப்பாம்பு சினந்து படம் விரித்தவற்றைப் போல இதழ்விரிந்த காந்தள்
மலர்களும், குடைவிரிந்தவை