பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்34

      10. மாயோய் இவையெல்லாம் நின்கண் தோன்றிப் பரந்தவையாகத்
தொடுத்துக் கூறினேம், வேதஞ் சொல்லுதலான்.

      நித்தமாகிய வேதம் தேவரும் மூவேழுலகுகளும் உயிர்ப்பன்மையும்
நின்கண் தோன்றியவாறு அறிந்து கூறும்; சிற்றறிவினேமாகிய யாம்
அவற்றுட் சிலவற்றை முறைபிறழக் கூறுவதல்லது அவ்வாறு எல்லாம்
கூறுதற்கு உரியமல்லமென்பார் 'வலந்துரைத்தே' மென்றார்.

      திணைவிராய் எண்ணப்பட்ட பெயர் பெரும்பான்மையும்
அஃறிணைச் சொற்கொண்டு முடிதலின் 'பரந்தவை' என்றார்.

      12. தாமரைப்பூ படைப்பிற்கு முதலாக வந்து மலரும் என்பதற்கு
வேதம் ஞாபக வேதுவாகலின் அதற்கு அதனை ஓடையாக உபசரித்தார்.

      உபநிடதத்தின் பொருள் பொருந்தும் கூற்றாற் கூறுகின்றாராகலின்
'வாய்மொழி ஓடை' என்றார். ஒரோவழி அவ்வருமறைதானும் அதனை
அவ்வாறு கூறுமாதலின் அதன் கூற்றெனவும் அமையும்.

15 - 19: ஏஎர் . . . . . . . . . தொழாருமுளரோ

      (இ - ள்.) 'ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்
- அழகு விளங்காநின்ற அணிகலன்களையுடைய தேவரிடத்தினின்றும்
கவர்ந்து கொண்டுவரப்பட்ட அமிழ்தத்தாலே, பயந்தோள் இடுக்கண்
களைந்த புள்ளினை - தன்னையீன்ற தாயாகிய விந்தையினது துன்பத்தை
அகற்றிய கருடனை ஊர்தியாக உடையை; நிவந்து ஓங்கு உயர் கொடி
- மிக ஓங்கி உயர்ந்த கொடியினிடத்தே, பயந்தோள் இடுக்கண் களைந்த
புள்ளின் சேவலோய் - தாயினது துன்பமகற்றிய அக்கருடச்சேவலை
உடையோய், நின் சேவடி தொழாரும் உளரோ - நின் சிவந்த
திருவடிகளைத் தொழா தவரும் உளரோ?'

      (வி-ம்.) ஏஎர் - அழகு; அமிழ்தத்தைக் காத்திருந்த அமரரை
ஓட்டி அவரிடத்தினின்றும் வௌவிய அமிழ்தினாலே, என்க. பயந்தோள்
- தாய்; விநதை என்பவள். விநதை உற்ற இடுக்கணாவது: இந்திரனுடைய
குதிரையின் வால் தூய வெள்ளை நிறமுடையதென்று விநதை கூறினள்.
அதுகேட்ட கத்துரு வென்பவள் அக் குதிரையின் வால் கரிது என்றாள்.
கரிதாயின் உனக்கு யான் அடிமையாவேன் என விநதை கூறினள். கத்துரு
பின்னர்த் தன் மக்களால் அக் குதிரையின் வால் கரிதாகத் தோன்றும்படி
ஒரு சூழ்ச்சி செய்து விநதையை அழைத்துக் காட்ட விநதை கத்துருவுக்கு
அடிமையாயினள். பின்னர்க் கத்துரு, தேவாமிழ்தத்தைக் கவர்ந்து
எனக்குத் தருவாய் எனின் உன்னை விடுதலைசெய்வேன் என்றாள்.
இச் செய்தியை விநதை தன் மகனாகிய கருடனுக்குக் கூற, அவன் சென்று
அமிழ்தத்திற்குக் காவலிருந்த அமரரை ஓட்டி அதனைக் கவர்ந்துவந்து
கத்துருவிற்குக் கொடுத்துத் தன் தாயின் அடிமைத்தளை யறுத்து மீட்டான்
என்பதாம்.

      கருடனை ஊர்தியாகவும், "கொடியாகவும் உடையை என்பது
கருத்து. நிவந்தோங்குயர்: ஒருபொருட்பன்மொழி: மிக ஓங்கி உயர்ந்த
என்க.