பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்343

பின்னும் பூசி மணமேற்றாநின்றாள்; இவ்வாறு அவ் வாடலரங்கின் கண்
பற்பலவாக நிகழ்ந்த மகளிர் செயலை யாங்கள் மீண்டும் நினைவுக்குக்
கொண்டுவரும்பொழுது அக் காட்சிகள் கைவல்லான் தீட்டிய
ஓவியக்காட்சி போல எங்கள் அகக்கண்முன்னே தோன்றுகின்றன.

      30 - 38: தண்பரங்குன்றத்தின்கண் முகில்முழக்கங் கேட்ட
மயில்கள் ஆலவட்டம் அசைத்தாற்போலத் தம்மிரு சிறகையும் விரித்து
ஆடாநின்றன; வண்டுகள் வேய்ங்குழலிசைபோல முரன்றன; அருவி
முழவுபோல முழங்கிற்று; இவ்வாறு இயற்கை இசைகள் ஒருங்கே எழுந்து
யாண்டும் ஒலித்தன.

      39 - 45: திருப்பரங்குன்றத்துள்ள சுனையின்கண், நீராடிய ஒருத்தி
நீரினுள் முழுகி எழுந்தாள்; அவ்விடம் அருநிலையாக இருந்தமையால்
கரையில் நின்ற தன் கணவனை மூங்கிற்புணை தரும்படி வேண்டினாள்;
அவன் புணைகொடாது, அரக்குநீர் வட்டிலை அவள்பால் எறிந்தான்;
புணை பெறாமையாலே அந் நீரிடை அவள்படும் அல்லல் கண்டு
அக் காதலன் மிகமகிழ்ந்து செவ்வியறிந்து அச் சுனைநீரிற் பாய்ந்து
அவளைத் தழுவினான்; இத்தகைய இன்பம் நல்கும் இயல்புடையது
அப்பரங்குன்றம்.

      46-53: பசிய அணிகலன் அணிந்த செவ்வேளே! நினது
பரங்குன்றம் எப்பொழுதும் மைந்தர் அணிந்த சந்தன மணமேற்ற
காற்றும், மகளிருடைய மணப்பொடி தூவிய கூந்தலினை அசைத்து
அந் நறுமணமேற்ற காற்றும், நின் பூசைக்கண் எழுந்த நறும்புகையூடு
புகுந்து அந் நறுமணத்தை ஏற்ற காற்றும் உலவாநிற்கும்;

      54 - 65: ஒரு விறலி, கோதையசையக் களிமகிழ்ச்சி தடுப்பத்
துகில்நெகிழக் கண்சிவப்ப ஆடாநின்றாள். அத்தோற்றம் அழகிய
பூங்கொடியொன்று ஆடையணிந்து அணிகலன் அணிந்து வாடையாலே
அசைவதுபோல இருந்தது; மற்றொருத்தி தாளத்திற்கேற்ப ஆடினாள்;
அவள் கண் அம்பு போலப் பிறழ்ந்தன.

      66-70: பகைவரை வென்ற வேலையுடையை; பன்னிரு தோளையும்
ஆறுமுகங்களையும் உடையை; வெற்றிச் செல்வனே! அடியேங்கள் எம்
சுற்றத்தோடு என்றென்றும் நினது திருவடி நீழலிலே உறைதலை விரும்பி
நின்னைத் தொழுது வேண்டுகின்றேம்; அப் பேற்றினை எமக்கு
அருள்வாயாக.