இன்றுபோல் இயைகெனப் பரவுதும் ஒன்றார்த் தேய்த்த
செல்வநிற் றொழுதே. (70)
கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு; கண்ணகனார் இசை; பண் காந்தாரம்.
உரை
1 - 7: ஊர்ந்ததை . . . . . . . அடையல்
(இ-ள்.) ஊர்ந்ததை - முருகப் பெருமானே! நீ ஊர்ந்த
ஊர்தி,
எரிபுரை இடை ஓடை இமைக்கும் சென்னி - விளக்கத்தாலே நெருப்பை
ஒக்கும் நெற்றிப்பட்டம் இடையே கிடந்து விளங்காநின்ற
மத்தகத்தையுடைய, பொருசமம் கடந்த புகழ்சால் வேழம் - பொராநின்ற
போர்கள்தோறும் பகைவரை வென்றமையால் உண்டான புகழ்நிறைந்த
பிணிமுகம் என்னும் களிற்றியானையாகும், தொட்டதை - நீ நின்
திருவடிகளிலே அணிந்தது, தாமரைதாள் இயை துப்பு அமை
துவர்நீர்துறை மறையழுத்திய - செந்தாமரைமலர் போன்ற
அத் திருவடி நிறத்திற்குப் பொருந்திய பவளம்போலும் நிறமுடைய
துவரிட்ட நீர்த்துறையிலே முழுதும் மறைய அழுத்திப் பதனிட்ட,
சருமத்தின் தைப்பு அமை வெரிநத் தோலொடு - தோலால் தைத்தல்
அமைந்த முதுகின் தோலோடே, வரிமலி அரவு உரிவள்பு கண்டன்ன
- வரிகள்மிக்க பாம்பினது தோலைக் கீறிச் செய்த வாரை ஒத்த,
முழுமயா மிடைந்த - மயிர்முழுதும் செறிந்த, புரிமென் பீலிப்
போழ்புனை அடையல் - விரும்புதற்குரிய மெல்லிய மயிற்பீலிப்
பிளவுகளும் கொண்டு இயற்றப்பட்ட அடையலாகிய செருப்பு;
(வி-ம்.) ஊர்ந்ததை - ஊர்ந்தது, ஐ: பகுதிப்பொருள்
விகுதி:
எரி-தீ. புரை - ஒக்கும். ஓடை - நெற்றிப்பட்டம். இமைக்கும் -
விளங்கும். சமம் - போர். வேழம் - யானை. தொட்டது - காலின்கண்
அணிந்த தென்க: நூலானும் தைத்தல் உண்டாகலின், தோலாலே
தைத்தலமைந்த 'அடையல்' என்றார். சருமம் - தோல். வெரிநத்தோல்
- முதுகின் றோல்: இஃது உறுதியுடைமை கூறிற்று. தோலாலே
தைக்கப்பட்ட முதுகின் தோலோடு பீலிப்பிளவுகளும் கொண்டியற்றிய
அடையல் என்க. துவர்நீர் - மணநீர்: துவர்நீரிலே முழுகவைத்துப்
பதனிட்ட தோல் என்க. தோலின்கண் நறுமணமேற்றுதற் பொருட்டுப்
பதனிட்ட தோலைத் துவர்நீரில் அழுத்துவர் என்க. 'துவர்ப்பெருஞ்
செருப்' பென்றார் (திருநா. தே சாய்க்காடு) பிறரும். 'நீர்மிகுதி கூறுவார்
துவர் நீர்த்துறை அழுத்திய தோல்' என்றார்.
'வெரிந்' என்னும் நகரவீற்றுச் சொல் வேற்றுமைப்புணர்ச்சிக்கண்
"நகர இறுதியும் அதனோ ரற்றே" "வேற்றுமைக்கு உக்கெட அகரம்
|