"இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்"
(முருகு. 10-1)
எனவும், "கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி..... . . முருகே" (நற்-34)
என்றும், "கார்நறுங் கடம்பின் . . . . தெரியற் சூர்நவை முருகன்"
(புறநா -23) என்றும், "கார்க் கடப்பந்தாரெங் கடவுள்"
(சிலப் - 24. பாட்டுமடை) என்றும், "காரலர் கடம்பன்" (மணி. 4-49)
என்றும் பிற சான்றோரும் பன்னூறிடங்களினும் ஓதுதலானும் உணர்க.
சுருளுடை - சுருளுதல் உடைய. வள்ளி - பூவிற்கு ஆகுபெயர். இழைத்த
- தொடுத்த. இணர் - மலருக்கு ஆகுபெயர். உருள் இணர்:
உவமத்தொகை. தேர் உருள் போன்ற மலர் என்க. தார் - மார்பிலணியும்
மாலை ஒன்றுபடக் கமழ்தார் - ஒருசேர மலர்ந்து கமழும் மலரையுடைய
தார் என்க. அமர்ந்தது - வீற்றிருந்தது, புரையோர் - உயர்ந்தோர்.
என்றது மெய்க்காட்சியாளரை. நா என்றது - செந்நா என்பது படநின்றது.
நிரை ஏழடுக்கிய நீளிலைப்பாலை என்றது ஏழிலைப் பாலையை.
ஏழிலைப்பாலை யானைமதம் நாறுமியல்புடையது. எனவே
ஏழிலைப்பாலையின் நாற்றமாகிய மதநாற்றத்தையும் இலகடத்தையும்
சூழியையும் உடைய குன்றம் என்க. எனவே யானையை ஒத்த குன்றம்
என்பது குறிப்பாற் பெற்றாம். ஏழிலைப்பாலை யானை மதம் கமழும்
என்பதனை,
"பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக்
காத்த அங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப்
பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகக்
காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு"
(வரைக்காட்சி - 6)
எனவரும் கம்பராமாயணச் செய்யுளானும் உணர்க.
'அரைவரை' என்றது மலையிடைமலையாகிய குவட்டினை. மேகலை -
இலகடம். அஃதாவது: யானையின் பிடரிலிடப்படும் தவிசு. நீர் - அருவி
நீர். சூழி - முகபடாம். உகந்த - உயர்ந்த.
வேழம் முதல் குன்றம் ஈறாகக் கூறப்பட்டவை ஊர்திமுதல் திருப்பதி
ஈறாக உள்ள பிறவும் உளவாயினும் இவை சிறந்தன என்பதுபட விதந்து
ஓதியபடியாம்.
(பரிமே.) 8. நின்னை மதியாத அவுணர் தமக்குத் துணையா மதித்த மா.
9. புள் - அன்றில். புடை - பக்கம்
16 - 17: குன்றத்து . . . . . . . . தொழுது
(இ - ள்.) வென்றிக் கொடி அணி செல்வ - பகைவரை வென்ற
வெற்றியாலே கோழிக்கொடியை அழகுறச்செய்த செல்வனே, நின்
குன்றத்து அடி இயைக்க என - நினது திருப்பரங் குன்றத்தின் அடியிலே
இருந்து வாழும் பேற்றினை |
|
|
|