பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்35

19 - 29: அவற்றுள் . . . . . . . பாடும்வகை

      (இ-ள்.) அவற்றுள் - நினது அச் சேவடிகளுள் வைத்து, கீழ் ஏழ்
உலகமும் உற்ற அடியினை - கீழேயுள்ள ஏழுலகங்களையும் நீ
அளக்கின்ற காலத்துச் சிறிதும் எஞ்சாமல் பொருந்திய ஒரு
திருவடியினையும் உடையை, தீய செங்கனலியும் ஞமனும் கூற்றமும்
- உலகத்தைத் தீய்த்தழிக்கும் சிவந்த ஊழித்தீயும் இயமனும் அவன்
ஏவலனாகிய கூற்றுவனும், மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி - குற்றமில்லாத ஆயிரங் கதிர்களையுடைய பன்னிரண்டு
ஞாயிறுகளும் ஒன்றுகூடாநின்ற ஊழிக்காலத்திலே, தொகூஉம் ஆழிக்கண்
இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் - ஏழும்
ஒன்றுகூடிய கடலின்கண் முழுகிய பெரிய நிலத்தை அச்சம்பொருந்திய
பன்றியாகிக் கொம்பாலே குத்தி மேலே எடுத்து வந்தானே என்றும்,
மாவிசும்பு ஒழுகுபுனல் வறள - பெரிய விசும்பினின்றும் இடையறாது
ஒழுகாநின்ற மழைநீர் வறண்டொழியும் படி, அன்னச்சேவல் ஆய்
- அன்னச்சேவலாக வடிவங்கொண்டு, சிறகர்ப் புலர்த்தியோய் எனவும்
- சிறகுகளாலே புலரச் செய்தோனே என்றும், ஞாலத்து உறையுள்
தேவரும் வானத்து உறையுள் நால்எண் தேவரும் - இந் நிலவுலகத்தை
வாழுமிடமாகக் கொண்ட முனிவர்களும் வானுலகத்தை வாழிடமாகக்
கொண்ட நால்வகை எண்ணினையுடைய முப்பத்துமூன்று வகைப்பட்ட
தேவர்களும் நின் நயந்து பாடுவோர் பாடும் வகையே - நின்னை
விரும்பிப் பாடுவார் அவர்களும் பாடுவதும் தம் முன்னோர் பாடும்
வகையே;

      (வி - ம்.) சுவர்க்கம் மத்தியம் பாதலம் என மூன்று கூறுபட்ட
ஒரோஒன்று ஏழுவகைப்பட்ட உலகங்களுள் வைத்துக் கீழ்உலகம்
ஏழனையும் என்க. நிலத்தை அளக்கின்ற காலத்துக் கீழேழுலகங்களில்
ஒன்றேனும் எஞ்சாது ஒரேயடியிற் பொருந்துமாறு அளந்த
திருவடியினையுடையை என்க. அவற்றுள் என்பதற்கு முற்கூறிய
மூவேழுலகினுள் எனக் கூறினும் பொருந்தும். தீ செங்கனலி:
வினைத்தொகை. ஞமனும் கூற்றமும் என மாறுக; கனலியும் இயமனும்
கூற்றமும் ஞாயிறுகளும் ஒன்றுகூடி அழிக்கும் ஊழிமுடிவிலே என்க
தொகூஉம் என்பதனை ஆழியோடும் கூட்டி ஏழும் ஒன்றுகூடிய
ஆழியின்கண் என்க.

      உருகெழு - அச்சம் பொருந்தின; கண்டோர் அச்சமுறுதற்குக்
காரணமான கேழல் என்றவாறு. மாவிசும்பு: கரிய மேகத்திற்கு
ஆகுபெயர். ஊழி முடிவின்கண் ஏழுமேகமும் ஒன்றுகூடி இடையறாது
பெய்து நிலத்தை முழுகச்செய்யும்பொழுது அவ் வூழி மழையால் மீண்டும்
நிலம் முழுகாதவாறு இறைவன் அன்னமாய் அந் நீரைச் சிறகரால்
புலர்த்துவன் என்பது கருத்து. ஞாலத்துறையுட்டேவர் - முனிவர்;
வானத்துறையுள் தேவர் எனப் பின்னரும் கூட்டுக.