பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்352

மிகுவித்தல். "பிறங்கு நீர்ப்பண்ணை" (சிலப். 14:1) என்புழி அடியார்க்கு
நல்லார் "பிறங்குதல் மிகுதலுமாம்" என்றமையானும் அஃதப்
பொருட்டாதல் உணர்க. பாணி - தாளம். ததும்ப - முழங்க. இரங்கு
முரசு - முழங்கும் முரசு. முரசினான் - முருகவேள். குன்று - திருப்பரங்குன்றம்.

      (பரிமே.) 35. யாழினது இசையை மேன்மேலு. . . . . .

      37. இவ்வாற்றால் தம்முள் வேறுபட்டன பலவும் ஒருங்கொலிக்கும்.

39 - 45: தாழ்நீர் . . . . . . . தண்பரங்குன்று

      (இ - ள்.) தண் பரங்குன்று - அன்பராயினார் உளம் நினைத்த
மாத்திரையானே குளிர்தற்குக் காரணமான திருப்பரங்குன்றம், தாழ் நீர்
இமிழ்சுனை நாப்பண் - தன்கண் வீழா நின்ற அருவிநீர் முழங்குதற்கு
இடமான சுனையின் நடுவே, குளித்து அவண் நீர் மீ நிவந்த விறல்இழை
- முழுகி விழுந்த அவ்விடத்தே நீரின் மேலே எழுந்த வெற்றியையுடைய
அணிகலன் அணிந்தாளொரு மடந்தை, கேள்வனை நீரழுந்து தன்
கையின் வேய் விடுகென - கரையில் நின்ற தன் கணவனை நோக்கி
நீரிலே அழுந்துகின்ற தனது கையின்கண் புணையாகிய மூங்கிலைத்
தருக என்று கேட்ப, பூநீர் வட்டம் எறிய - அவன் அவளுக்கு
இன்றியமையாத அப் புணையைக் கொடாதே மலர்மணமுடைய
அரக்குநீர் நிரப்பிய வட்டினை எறிதலாலே, புணை பெறாது - புணை
பெறாமல். அருநிலை நீரின் அவள் துயர் கண்டு - அருநிலையான
நீரின்கண் அவள் படுகின்ற அல்லலைக் கண்டு கொழுநன் மகிழ்
தூங்கி கொய் பூம் புனல் வீழ்ந்து தழுவும் தகை வகைத்து - கணவன்
இன்புற்றுப் பின்னர்க் கொய்தற்குரிய நீர்ப்பூக்கள் மிக்க அச் சுனை
நீரிற் பாய்ந்து அவளைத் தழுவும் தன்மையினையுடைத்து;

      (வி - ம்.) குன்றம், தன்கட் சுனையில் முழுகி எழுந்தாள் ஒருத்தி
கரை நின்ற கணவனைப் புணை கேட்ப, அவன் வட்டெறிய, அவள்
புணை பெறாது அவ் வருநிலை நீரிற் படும் துயர்கண்டு மகிழ்ந்து, பின்
அச் சுனைநீரிற் பாய்ந்து அவளைத் தழுவிக் கொள்வதாகிய நீர்
விளையாட்டின்பத்தை நல்கும் இயல்புடைத்து என்பதாம்.

      தாழ்நீர் என்றது அருவியை. அருவி சுனையின்கண் வீழ்ந்து
முழங்கும் என்க. இமிழ் - முழக்கம். நாப்பண் - நடு. அவண் -
அவ்விடத்தே, நீர்மீ என்பது. மீநீர் என முன்பின் மாறிநின்றது.
விறலிழை - அன்மொழித் தொகையாய் ஒருத்தி என்னும் பொருள்பட
நின்றது. விறல் - வெற்றி. இழை - அணிகலன். அணிகலனுக்கு
வெற்றியாவது ஏனை அணிகலன்களினும் சிறந்திருத்தல். கேள்வன் -
கணவன். வேய் - புணையாகிய மூங்கில். பூநீர் - மலர்மணமுடைய
அரக்கு நீர். அருநிலை நீர் - நிலைத்தும் நிலையாததுமாகிய நீர். காதலருள்