பக்கம் எண் :

பரிபாடல்- வையை357

இருபத்திரண்டாம் பாடல்
------------

வையை

பொருட் சுருக்கம்

      1 - 11: பொதியில் மலைக்குரியவனான பாண்டியனுடைய
போரின்கண் அவன் பகைமன்னர் திறையாகக் கொடுத்தே
களிற்றுயானைகள் ஓரிடத்தே குழுமினாற்போன்று வானத்தே முகில்கள்
குழுமி, அப் பாண்டியன் போர் முரசம்போன்று முழங்கி யிடித்து, அவன்
பகைப்படையின்மேல் விடும் அம்புகள் போன்று துளித்து, அவன்
வண்மைபோன்று நீரைப் பொழிந்தன; அதனால் வையையிற் பெருகிய
நீர், அப் பாண்டியன் படை பகைநிலத்திற் புகுமாறுபோல
அப் பாண்டியன் நாட்டிலுள்ள கழனிகளிலெல்லாம் புகுந்து பெருகிற்று.

      12-25: அதுகண்ட மதுரைப் பெருமக்கள் தம் பணியாளர்
துவர்களையும், புகைப்பொருள்களையும், சந்தனத்தையும்,
நீர்விளையாட்டிற் குரிய துருத்தி முதலியவற்றையும், கள்ளையும்,
துகில்களையும், ஏந்திக் கொண்டு தம்மைப் பின்தொடர முற்பட்டு,
வையைக்கரையிலும் ஆண்டுள்ள பொழில்களிலும், போந்து நெருங்கினர்.

      26 - 35: வையைப் புதுநீராடற்கு இம் மகளிரும் மைந்தரும்
செய்த தவப்பயன் பெரிதெனச் சான்றோர் கூறும்படி, வையையின் வந்து
குழுமிய மகளிர் மைந்தர்களால் ஆண்டுக் கட்புலனாய்த் தோன்றிய
அழகு, அம் மக்களால் வையைக்கு உண்டாயதோ அன்றி, வையையால்
அம் மக்கட்கு உண்டாக்கப்பட்டதோ என்று தெளிதற்கு அரிதாயிருந்தது.

      36 - 45: அப்பொழுது அவ் வையைக் கண்ணதாகிய திருமருத
முன்றுறைக்கண் முழவிற்கு மாறாக முகில்கள் முழங்கின; யாழிற்கு
மாறாகப் பூங்கொம்பிடத்தே வண்டுகள் இசைத்தன; தும்பிகள் குழலுக்கு
மாறாக முரன்றன; விறலியர் ஆட்டத்திற்கு மாறாகப் பூங்கொடிகள்
ஆடின. இவ்வாறு ஒன்றற்கொன்று மாறாகிய நிகழ்ச்சிகள் பற்பல
நிகழ்ந்தன.

ஒளிறுவாள் பொருப்பன் உடல்சமத் திறுத்த
களிறுநிரைத் தவைபோற் கொண்மூ நெரிதர
அரசுபடக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்