பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்36

      நின்னைப் பாடுவோராகிய முனிவரும் தேவரும் பாடுவதும் தம்
முன்னோர் பாடும் வகையே என்க. எனவே நினது பழைமையை
முனிவரும் தேவரும்கூட அறிந்து பாடவல்லாரல்லர் என்றபடியாம்.

      நால் எண்தேவர் - ஆதித்தன் உருத்திரன் வசு மருத்துவன்
என்னும் ஒரோவொரு பொருள்கள் பலவாகப் பகுக்குங்கால் பன்னிருவர்
பதினொருவர் எண்மர் இருவர் என நால்வேறு எண்ணின்கண் அடங்கிய
முப்பத்துமூவரும் என்க.

      (பரிமே.) 25. புட்கல முதலிய மேகங்கள் பொழிய விசும்பினின்று
வீழ்கின்ற நீரை.

29 - 30: எம்பாடல்தாம் . . . . . . .பாடும்வகை

      (இ - ள்.) எம்பாடல்தாம் - யாங்கள் பாடுவதும், அப்பாடுவார்
பாடும்வகை - அம் முனிவரும் தேவரும் பாடுவது போன்ற வகையே
தான்;

      (வி - ம்.) முனிவரும் தேவரும் நின்னை உணர்ந்துபாட
மாட்டுவார் அல்லர் எனின், யாங்கள் நின்னை அறிந்து பாடுதல்
எங்ஙனம்? யாங்களும் அம் முனிவர் முதலியோர் போன்று முன்னோர்
நின்னைப் பாடும் முறையைப் பின்பற்றியே பாடாநின்றேம் என்றவாறு.

31 - 45: கூந்தல் . . . . . . . . . . . யாக்கையை

      (இ - ள்.) கூந்தல் என்னும் பெயரொடு - கூந்தல் மாவாகிய
குதிரை வடிவத்தோடு வந்த, கூந்தல் எரிசினம் கொன்றோய் - கேசி
என்பானது கனல்கின்ற வெகுளியை அடக்கிக் கொன்றவனே!, நின்
கை புகழ் உருவின் - நின்னுடைய கைகள் நினது புகழை ஒத்தன,
நகை அச்சாக நல்லமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயம் இல்
ஒருகை - அவற்றுள் நீ மோகினியாகிய பொழுது நின்னைக் கண்டு
மகிழ்ந்த மகிழ்ச்சியே இறுதியில் அவுணர்க்கு அச்சமாய் முடிய
அமரர்களுக்கு மட்டுமே நல்ல அமிழ்தத்தினைப் பகுத்து வழங்கிய
காரணத்தானே செப்பத்திற் றப்பிய நலமில்லாத ஒரு கையினையும்
உடையை ஆயினாய், இருகை மாஅல் - இரண்டு கைகளையுடைய
திருமாலே! முக்கை முனிவ - மூன்று கைகளையுடைய முனிவனே!
நால் கை அண்ணல் - நான்கு கைகளையுடைய தலைவனே!, ஐங்கை
மைந்த - ஐந்து கைகளையுடைய வலியுடையோனே! , அறுகை
நெடுவேள் - ஆறு கைகளையுடைய நெடியவேளே!, எழுகையாள
- ஏழு கைகளை யுடையவனே!, எண்கை ஏந்தல் - எட்டுக்
கைகளையுடைய பெருமானே!, ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள
- ஒன்பது பெருங்கைகளையுடைய நிலை பெற்ற புகழோனே!.
பதிற்றுக்கை மதவலி - பத்துக் கைகளையுடைய பேராற்றலுடையோனே!
நூற்றுக்கை ஆற்றல் -