மற்றவன் தானையின் - மனவெழுச்சியாலே
பகைவர் நாட்டிற் போர்
முறைமையாலே சென்ற அப் பாண்டியனுடைய படைகளைப் போன்று,
மண்மிசை ஆனாது வந்து ஈண்டி தொகுபு - அப் பாண்டியனது
நாட்டின்கண் அமையாது மேன்மேலும் வந்து கூடிப் பெருகி, நிலம்
எல்லாம் போர் ஆர் வயல் புகுத - அந் நாட்டின்கண் உள்ள நிலம்
எங்கும் வைப்போர்வு பொருந்திய கழனிகளிலே புகுதாநிற்ப;
(வி - ம்.) கொண்மூ பொருப்பன் பொருத போரின்கண்
பகைவர்
திறையிறுத்த களிற்றின் நிரைபோன்று வானின்கண் நெரி தந்து, ஓடா
நின்ற அக்கார் அவன் முரசுபோல முழங்கு இடிபயிற்றி, அவன்
பகைத்தானையின் மேல் விடும் கணைபோல உறை சிதறி, அவன்
வெல்போல் மின்னி, அவன் வண்மைபோல வானத்தினின்றும் பொழிந்த
நீர், பகை நாட்டிற் போன அவன் தானைபோல் அப் பாண்டியன்
மண்மிசை நிலனெங்கும் உள்ள கழனிகளிலே புகுதாநிற்ப என்க.
ஒளிறுவாள்; வினைத்தொகை. பொருப்பன் - பாண்டியன்
பொருப்பு - பொதியிலுக்குரிய ஒரு பெயர். பொதியிலையுடைய
பாண்டியன் என்க. "காமர் கடுந்திண்டேர்ப் பொருப்பன்"
(கலி - 35: 24) எனவும், "வகையமை தண்டாரான் கோடுயர்
பொருப்பின் மேல்" (கலி-47; 16) எனவும், "பொருப்பிலே பிறந்து"
(வில்லிபார. சிறப்புப்பா -1) எனவும் பிற சான்றோரும் பாண்டியனைப்
பொருப்பன் என்றும், பொதியிலைப் பொருப்பு என்றும் ஓதுதல் உணர்க.
உடல் சமம் - பொருதாநின்ற போர். இறுத்த - பகைவர்
திறையாக இறுத்த என்க. நிரைத்தவையாகிய களிறு போல் என்க.
களிற்று நிரை - முகிற் கூட்டத்திற்கு உவமை. கொண்மு - முகில்.
நெரிதர என்னும் செயவெனெச்சத்தை நெரிதந்து எனச்
செய்தெனெச்சமாக்குக. ஓடும் அக்கார் என்க. கார் - முகில். அவன்
உடன்ற தானை என்க. வில்லினின்றும் விசையாக விடும் கணை என்க.
எஃகு - வேற்படை. கடிய - கடியவாக. மண் - பாண்டிநாடு என்பதுபட
நின்றது. பாண்டி நாட்டின் நிலமெல்லாம் வயல்புகுத. போர் -
வைக்கோல் போர்வு. போர்வு கூறியது, நிலவளம் தெரித்தவாறு. என்னை?
இறந்தயாண்டிற் குவித்த வைப்போர் கழனிகளிலே வரும் யாண்டுத்
தொடக்கத்தேயும் கிடந்தன என்பது கருத்தாகலின்.
இப் பகுதிக்குப் பரிமேலழகர் உரை கிடைத்திலது.
இச் செய்யுளில் எஞ்சிய பகுதிக்கும் அவ்வுரை நன்குகிடைத்திலது.
இப் பாடலும் இறுதிவரையிற் கிடைத்திலது.
இப் பாடலின் 12 ஆம் அடிமுதல், 17 ஆம் அடியின்
முதலிரண்டு
சீர்முடியவுள்ள சொற்கள் பெரிதும் சிதைந்தும் அழிந்தும் திரிந்தும்
போயின. ஆதலால் அவற்றிற்கு உரை காணமாட்டாமல் விடப்பட்டன.
இப் பகுதிக்குரிய பழைய உரையும் கிடைத்திலது. |
|
|
|