35 ஏதிலாள் கூந்த லிடக்கண்டு மற்றது
தாதாஎன் றாளுக்குத் தானே புனல்தந்து
வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றது
நோதலே செய்யே னுணங்கிழையா யிச்செவ்வி
போதலுண் டாங்கொ லறிந்து புனல் புணர்த்த(து)
40 ஓஓ பெரிதும் வியப்பு;
கயத்தக்க பூப்பெய்த காமக் கிழமை
நயத்தகு நல்லாளைக் கூடுமோ கூடும்
முயக்குக்குச் செவ்வி முலையு முயக்கத்து
நீரு மவட்குத் துணைக்கண்ணி நீர்விட்டோய்
45 நீயு மவட்குத் துணை;
பணிவி லுயர்சிறப்பிற் பஞ்சவன் கூடல்
மணியெழின் மாமேனி முத்த முறுவல்
அணிபவளச் செவ்வாய் அறங்காவற் பெண்டிர்
மணியணிந்த தம்முரிமை மைந்தரோ டாடித்
50 தணிவின்று வையைப் புனல்;
புனலூடு போவதோர் பூமாலை கொண்டை
எனலூழ் வகையெய்திற் றென்றேற்றுக் கொண்டை
புனலூடு நாடறியப் பூமாலை யப்பி
நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யுங் கனல்புடன்
55 கூடாமு னூடல் கொடியதிறம் கூடினால்
ஊடாளோ ஊர்த்தலர்வந் தூர்ந்து
எனவாங்கு
ஈப்பாய் அடுநறாக் கொண்டதிவ் யாறெனப்
பார்ப்பார் ஒழிந்தார் படிவு;
60 மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்றென்
றந்தணர் தோயலர் ஆறு:
வையைதே மேவ வழுவழுப் புற்றென
ஐயர்வாய் பூசுறார் ஆறு;
(விரைபிரை விரைதுறை கரையழிபிழியூரஊர்தரும் புனல்
65 கரையொடு கடலிடை வரையொடு கடலிடை
நிரைநிரை நீர்தரு நுரை
நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல்கரை புரளிய
செலுமறி கடல்
|
|