பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்39

54 - 58: திணிநிலம் . . . . . . . . மரபறிவோர்க்கே

      (இ-ள்.) அயர்ந்து திரிந்து-மயங்கி மாறுபட்டு நினக்குப்
பிழைசெய்து பின்னர், திணி நிலங் கடந்தக்கால்-நீ மண் செறிந்த
உலகத்தை அளந்த பொழுது நின் பெருமைகண்டு, நின் அஞ்சி அகன்று
ஓடி - நினக்கு அஞ்சித் தம்பதிப் பெயர்ந்து போய், கடல் பாய்ந்த
- கடலிலே புக்கொளித்த, பிணிநெகிழ்பு அவிழ் தண்தார் - கட்டவிழ்ந்து
மலர்ந்த குளிர்ந்த மாலையினையுடைய அன்னவர் பட அல்லா
அவுணர்க்கும் முதல்வன் நீ- அத்தன்மையுடையரும் உட்பட அவரல்லாத
ஏனை அவுணர்க்கும் தலைவன் நீயே காண், நின் மரபு அறிவோர்க்கு
- நின்னுடைய இயல்பினை அறியும் ஞானியர்க்கும், அதனால் - நீ
அமரர்க்கும் அவுணர்க்கும் ஒத்திருத்தலானே, இவர் பகைவர் இவர்
நட்டோர் என்னும் வகையும் உண்டோ - இவர் எமக்குப்
பகையாயுள்ளோர் இவர் எமக்கு நண்பராயுள்ளோர் என்று கூறுதற்கு
வகையும் உளதோ? இல்லையன்றோ?;

      (வி-ம்.) பெருமானே! இருவேறு பண்புடைய அமரர்க்கும்
அவுணர்க்கும் நீயே தலைவனாக இருக்கின்ற நின்னியல்பினை அறியும்
ஞானியர்க்கும் 'யாவருங் கேளிர்' என்பதல்லால் இவர் பகைவர் இவர்
நட்டோர் எனக் கூறுதற்கு வகையும் உளதோ என்பது கருத்து.

      நினக்கு யாவரும் அடியராதலின் நின் அடியார்க்கும் (யாவரும்
கேளிரே யாவர்) பகைவரும் நட்டோருமிலர் என்க. அயர்ந்து - மயங்கி;
திரிந்து - பகைப் பண்புடையராய்ப் பிறழ்ந்து என்க. பிழை செய்து
எனவும் நின்பெருமை கண்டு எனவும் சிலசொற்கள் வருவித்து முடிக்க.

59 - 62: ஆயிர . . . . . . . . . அறிந்தனம்

      (இ - ள்.) ஆயிரம் அணந் தலை அரவு - ஆயிரமாகிய கிளர்ந்த
தலைகளையுடைய ஆதிசேடனாகிய பாம்பினையும், வாய்க்கொண்ட - தன்
வாயிடத்தே பற்றிக் கொண்டுள்ள, ஊர்தி சேவலும் - நின் ஊர்தியாகிய
கருடச் சேவலும், செங்கண்மா அல் ஓ எனக் கிளக்கும் - சிவந்த
கண்களையுடைய திருமாலே யான் அறியாது கெட்டேன்! என்னை
உய்யக் கொண்டருள்க என ஓவென்று அலறி நெடுங்காலம்
கூப்பிட்டழைக்கும் படியான, கால முதல்வனை - காலத்திற்கு முதல்வனும்
நீயே!, இன ஏஎ கிளத்தலின் - நீ இத்தன்மையினை என்னும் இவற்றைச்
சாமவேதம் விதந்து கூறுதலானே, இனைமை நற்கு அறிந்தனம் -
யாங்களும் இத்தன்மைகளை விளங்க அறிந்தோம்;

      (வி - ம்) இவையெல்லாம் சாமவேதங் கூறுதலானே, யாங்களும்
அறிந்து கூறா நின்றேம் என்பது கருத்து.