பக்கம் எண் :

பரிபாடல்- வையை402

90 - 96: வெருவரு . . . . . . . தகைத்து

      (இ-ள்.) வெருவரு கொல்யானை வீங்கு தோள் மாறன் -
பகைவர்க்கு அச்சம் வருதற்குக் காரணமான கொலைத்தொழிலையுடைய
யானையையும் பருத்த தோளினையும் உடைய பாண்டியன், உரு கெழு
கூடலவரொடு - அழகு பொருந்திய தனது மதுரையின் கண் உள்ள
மாந்தருடனே, வையை வருபுனல் ஆடிய தன்மை பொருவுங்கால் -
வையையாற்றின்கண் வருகின்ற புது நீரின்கண் ஆடிய தன்மைக்கு
உவமை கூறுமிடத்து, இரு முந்நீர் வையம் பிடித்து என்னை - பெரிய
கடலாற் சூழப்பட்ட இவ்வுலகத்தே உவமை தேடினால் என்பயன், ஒரு
நிலையும் ஆற்ற இயையா - இப் பேருலகத்தே ஒரு தன்மையும் நன்கு
உவமையாகப் பொருந்த மாட்டாது, (யானூர்?) மாவில் வரு ஆயிரங்
கண்ணினான் இந்திரன் - யானையிலே வருகின்ற ஆயிரங்கண்ணை
உடையவனாகிய இந்திரன் தனதூர் வாழும் அமரர்கள் புடைசூழ, அந்தர
வான் யாற்று ஆடுந்தகைத்து - அந்தரத்திலே உள்ள வான்கங்கையின்
கண் நீராடிய தன்மைத்து.

      (வி-ம்.) மாறன் வையைப் புனலாடிய தன்மை இந்திரன் வான்
கங்கையில் ஆடியதனை ஒக்கும் என்றவாறு.

      மாறன் - பாண்டியன். உரு - அழகு. பொருட்கண் கூடலவரொடு
என்றதனால் உவமையினும் தனது அமராவதியிலுள்ள அமரரொடு எனக்
கூறிக்கொள்க. வையம் பிடித்து - இவ்வுலகினைப் பற்றின்.
இவ்வுலகிடத்தே உவமை தேடின் என்க. என்னை - என்ன
பயனுடைத்தாம். உவமை அகப்படாது என்றபடி.

      ஒரு நிலையும் இயையாது எனற்பாலது ஈறு கெட்டதென்க.

      93. 'படித்தென்னை' என்றும் பாடம்.

      94. 'வருமரபின்' எனவும் பாடம்.