பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்41

யில் நின்னைச் சிறப்பித்தல் காரணமாகக் கூறப்பட்ட அவை நினக்கு
உளவாம் தன்மையும் பொய், அனையை - நீ மேற் சொல்லிய தன்மையை
உடையை ஆதலான், முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
- உலகின்கண் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு அளிப்பு
அழிப்பு என்னும் தொழில்களைச் செய்யும் பொருட்டு, பிறவாப் பிறப்பு
இலை - நீ பிறவாத பிறப்பில்லை, பிறப்பித்தோர் இலை - அங்ஙனம் நீ
பிறப்பாயாயினும் நின்னை அவ்வாறு பிறக்கும்படி செய்தோரும் இல்லை;

      (வி - ம்.) தெறல் - அழிக்கும் பண்பு; அஃதாவது வெப்பம்.
நாற்றம் - மணம். மணி - மணியாந் தன்மை. மறை - அரும்பொருள்.
மைந்து - வலிமை. வெஞ்சுடருள் ஒளி என்க. அளி - குளிர்ப்பண்பு.
வெஞ்சுடர் - ஞாயிறு.

      உறைவு - உறைதற்றொழில். உறைவது - உறையுமிடம்.
உண்மையும் - நினக்கு அவை உளவாந்தன்மையும். மாயம் - பொய்.
மறதியுடையோர் தம் மறதியாலே நின்னைச் சிறப்பித்தல் காரணமாகக்
கூறப்பட்ட நினது உறையும் இடம் உறைதற்றொழில் ஆகியவை நினக்கு
உளவாந் தன்மையும் மாயம் என இயைபு காண்க. ஆர்: அசை.
அனையை. அத்தன்மையினை. மறதியுடையோர் என்றது, மறக்கும்
இயல்புடைய மானிடர் என்றவாறு. மறதியினூடேயும் நின்னை நினைந்து
சிறப்பித்தல் காரணமாகக் கூறப்பட்ட அவை என்க.

      முதலில் படைத்தற்கும் இடையே காத்தற்கும் இறுதியில்
அழித்தற்கும் நீ பிறவாப் பிறப்பில்லை என்க.

      நீ அங்ஙனம் பிறப்பினும் நின் திருவுளத்திற்கியையப்
பிறத்தலல்லால் எம்மைப் பிறப்பிக்கும் வினையும் பிரமனும்போல
நின்னைப் பிறப்பிப்போர் ஒருவரும் இலர் என்றவாறு.

73 - 76: பறவாப்பூவை . . . . . . . ஏமத்தைமாதோ,

      (இ - ள்.) பறவாப் பூவைப் பூவினோய் - காயாம் பூவினது
நிறத்தினையுடையோனே! அருள்குடை ஆக அறம் கோல் ஆக - நீ
திருவருளே வெண்கொற்றக் குடையாக அக் குடைக்கு அறமே காம்பாக,
மூவேழ் உலகமும் இருநிழல் படாமை - சுவர்க்க மத்திய பாதலம்
என்னும் முக்கூற்று இருபத்தோர் உலகத்தையும் இரண்டாவதாக வேறொரு
குடை நிழல் யாண்டும் படாதபடி, ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை - நினது
ஒரு குடை நீழலின்கண் ஆக்கிய இனிய காவலினையுடையாய்;

      (வி - ம்.) பறவாப்பூவை - காயா. வெளிப்படை; பறவாக் கொக்கு:
பாயா வேங்கை என்பனபோல. பூவினோய் பூவினது நிறம்போன்ற
மேனியை உடையோய் என்க. இனி அறங்கோலாக என்பதற்கு அறமே
செங்கோலாக எனினும் பொருந்தும். மாதோ: அசை.