பக்கம் எண் :

பரிபாடல்- மதுரை413

பத்தாம் பாடல்
------

மதுரை

பொருட் சுருக்கம்

      மதுரை பாண்டியனுடைய தமிழ்மொழி உளதாகு மளவும்
பழிபடாததாகும்.
கார்த்திகை காதிற் கனமகர குண்டலம்போற்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் அல்லது
கோத்தைஉண் டாமோ மதுரை கொடித்தேரான்
வார்த்தையுண் டாகு மளவு.

உரை

      (இ-ள்.) மதுரை - மதுரை நகரம், கொடித்தேரான் வார்த்தை
உண்டாகும் அளவு - மீனக்கொடியையுடைய பாண்டியனுடைய
செந்தமிழ்மொழி உளதாகும் காலமளவும், கார்த்திகை காதில் கன மகர
குண்டலம் போல - கார்த்திகை மகளிரின் - செவியிலிடப்பட்ட
பொன்னாலாகிய மகரக்குழை விளங்குமாறு, சீர்த்து விளங்கி - சிறந்து
விளங்கி, திருப்பூத்தல் அல்லது - செல்வம் பெருகிப்பொலிதல் அல்லது,
கோத்தை உண்டாமோ - குற்றம் உடைத்தாகுமோ? ஆகாது;

      (வி-ம்.) கார்த்திகை - கார்த்திகை மகளிர். இயற்கையிலேயே
விளங்கும் விண்மீன்களாகிய அம் மகளிரின் காதிலிடப்பட்ட பொன்
மகர குண்டலம் பெரிதும் விளங்குதல் இயல்பேயாகும். இங்ஙனமெல்லாம்
உவமைகளையும் படைத்துக்கொள்ளும் நல்லிசைப் புலவரின் புலமைப்
பண்பு நம்மனோரால் நினைந்து நினைந்து இன்புறற் பாலதாதலுணர்க.

      கனம் - பொன். மகரகுண்டலம் - மகரமீன் வடிவிற்றாய்ச்
செய்ததொரு காதணி. திரு - செல்வம். வார்த்தை என்பதற்குப் புகழ்
என்று பொருள் கோடல் எளிதே. வார்த்தை - மொழி. பாண்டியன்
மொழி எனக்கொண்டு தமிழ்மொழி உளதாகும் அளவும் என யாம்
உரைத்த உரையே சிறத்தலுணர்க.