பாம்பு தொடி பாம்பு முடிமேலன
45 பாம்புபூண் பாம்பு தலைமேலது
பாம்பு சிறை தலையன
பாம்பு படிமதஞ் சாய்த்தோய் பசும்பூணவை
கொடிமே லிருந்தவன் தாக்கிரை யதுபாம்பு
கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும்
50 கொடுமையுஞ் செம்மையும் வெம்மையுந் தண்மையும்
உள்வழி யுடையை யில்வழி யிலையே
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்றே மாற்ற லிலையே நினக்கு
மாற்றோ ரும்மிலர் கேளிரு மிலரெனும்
55 வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே
மனக்கோள் நினக்கென வடிவுவே றிலையே
கோளிருள் இருக்கை ஆய்மணி மேனி
நக்கலர் துழாஅய் நாறிணர்க் கண்ணியை
பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப
60 நின்னிற் றோன்றிய நிரையிதழ்த் தாமரை
அன்ன நாட்டத் தளப்பரியவை
நின்னிற் சிறந்தநின் தாளிணையவை
நின்னிற் சிறந்த நிறைகட வுளவை
அன்னோ ரல்லா வேறு முளவவை
65 நின்னோ ரன்னோ ரந்தணர் அருமறை
அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
70 எவ்வயி னோயு நீயேநின் ஆர்வலர்
தொழுதகை அமைதியின் அமர்ந்தோயு நீயே
அவரவர் ஏவ லாளனு நீயே
அவரவர் செய்பொருட் கரணமு நீயே.
கடவுள் வாழ்த்து
கடுவ னிளவெயினனார் பாட்டு; பெட்டனாகனார் இசை;
பண்ணுப் பாலை யாழ்.
|
|