எள்ளுநர்க் கடந்தட்ட இகனே மியவை
மண்ணுறு மணிபாய் உருவினவை
60 எண்ணிறந்த புகழவை எழின் மார்பினவை;
(இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்)
ஆங்கு,
(இது தனிச்சொல்)
காமரு சுற்றமொ டொருங்குநின் அடியுறை
யாம்இயைந் தொன்றுபு வைகலும் பொலிகென
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்
65 வாய்மொழிப் புலவநின் தாள்நிழல் தொழுதே.
(இது சுரிதகம்)
இது கடவுள் வாழ்த்து
உரை
1 - 5: ஆயிரம் . . . . . . . . . . . ஒருகுழை யொருவனை
(இதன் பொருள்)
அணங்கு உடை விரித்த ஆயிரம்
அருந்தலை - எவ்வுயிர்க்கும் அச்சந்தரும் இயல்பினையுடைய படம்
விரிக்கப்பட்ட ஆதிசேடனுடைய நோக்குதல் அரிய ஆயிரந் தலைகளும்,
தீஉமிழ் திறனொடு - சினத்தீயைச் சொரிகின்ற தன்மையோடே, முடிமிசை
அணவர - நினது திருமுடியின் மேலிடத்தே உயர்ந்தெழுந்து
நிழற்றாநிற்ப, மா உடை மலர்மார்பின் - திருமகள் வீற்றிருத்தலுடைய
அகன்ற திருமார்பினை யுடையையாய் இருத்தலோடும், மைஇல்
வால்வளைமேனி - குற்றமில்லாத வெள்ளிய சங்கினை ஒத்த
நிறத்தினையும், சேய் உயர்பணைமிசை எழில்வேழம் உயர்த்திய - மிக
உயர்ந்த மூங்கிற் கோலின் உச்சியிலே கட்டப்பட்ட அழகிய
யானைக்கொடியை உயர்த்தியவனும், வாய்வாங்கும் வளை நாஞ்சில் -
கூர்மை செய்யப்பட்ட வளைந்த கலப்பைப் படையுடையவனும், ஒருகுழை
ஒருவனை - ஒற்றைக் குழையை உடையவனுமாகிய பலதேவனாகவும்
திகழாநின்றனை;
(விளக்கம்)
விரித்த - விரிக்கப்பட்ட. அணங்கு - அச்சம்:
துன்பம் எனினுமாம். ஆயிரம் அருந்தலையும் எனவேண்டிய உம்மை
செய்யுள் விகாரத்தால் தொக்கது. என்னை?
"இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்"
(தொல் - சொல். சூ - 33)
என்பது விதியாகலான் என்க.
அருந்தலை என்றது காண்டற்கரிய தலை என்றவாறு. "பாம்பைக்
கண்டால் படையும் நடுங்கும்" என்னும் முதுமொழியும் காண்க. |